மலேசிய விசா காலம் மேலும் நீட்டிப்பு; தூதரக அதிகாரி சரவணக்குமார் தகவல்
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் on arrival visa எனப்படும் நடைமுறைப்படி விசா இல்லாமல் சுற்றுலா நோக்கத்திற்காக 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கிக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அது தற்போது மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மலேசிய தூதரக அதிகாரி சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மலேசியா சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த வாரம் பெங்களூருவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி ஆகிய நகரகங்களிலும் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய தூதரக அதிகாரி சரவணகுமார் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சுமார் 7,35,000 பேர் மலேசியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவில் 5,73,703 ஆக உள்ளது.
இந்த ஆண்டு இதைவிட அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் மலேசிய சுற்றுலாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
விசா இல்லாமல் இந்தியர்கள் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கிக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
விசா இல்லாமல் மேலும் அதிக நாட்கள் தங்கிக்கொள்ளும் வசதி இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்தியர்களுக்கான விசா நடைமுறை மேலும் எளிமைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்டிகோ ஏர்லைன்ஸ் போன்ற விமான போக்குவரத்து நிறுவனங்கள் சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர்,
வான்வெளி துறையில் தொடர்ந்து முன்னேறி வரும் இந்தியாவுடன் இணைந்து வான்வெளி மற்றும் ஐ.டி துறைகளில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.
மலேசியாவில் நடத்தப்படும் பெரிய பட்ஜெட் தமிழ் படங்களுக்கான படப்பிடிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என மலேசிய தூதரக அதிகாரி சரவணகுமாரை தமிழ திரைப்பட இயக்குநர் இராசிஅழகப்பன் கேட்டுக்கொண்டார்.