கண் ஆராய்ச்சி மையத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 60.77 லட்சம் நிதியுதவி
அகர்வால் கண் மருத்துவமனையின் “கண் ஆராய்ச்சி மையம்” என்பது ஒரு லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும்.
இந்த மையத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.
பத்மபூஷன் விருது பெற்ற கண் மருத்துவர் ஜெய்வீர் அகர்வால், அவரது மனைவி தாஹிரா அகர்வால் ஆகியோரால் 1978 ஆம் ஆண்டு இம்மையம் துவங்கப்பட்டது.
சென்னை, அதனை சுற்றியுள்ள பகுதிகள், கிராமங்கள், நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இம்மையத்தின் சார்பாக கண்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறது.
தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகளையும், உபரகரணங்களையும் வழங்கி வருகிறது.
இம்மையத்தில் தங்கி அறுவை சிகிச்சை செய்வோருக்கு தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் இம்மையம் செய்து வருகிறது.
இந்நிறுவனத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து சுமார் 60 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாயை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குனர் வினய் டோன்ஸ் இதற்கான காசோலையை கண் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அதியா அகர்வாலிடம் வழங்கினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கண் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அதியா அகர்வால், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை வழங்கி வரும் கண் ஆராய்ச்சி மையத்திற்கு எஸ்.பி.ஐ. வங்கி நிதி வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்நிதியை கொண்டு கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன நுண்ணோக்கி கொள்முதல் செய்யப்படும் என்றும், இதன் மூலம் சிக்கலான அறுவை சிகிச்சைகள் அதிகளவில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
கண்களில் ஏற்படும் பாதிப்புகளில் ஐம்பது சதவீதம் கண்புரையால் ஏற்படுவதாகவும், கடந்த மாதத்தில் மட்டும் தங்களது ஆராய்ச்சி மையத்தில் சுமார் 700 இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தங்களது மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு நிகரான தரத்தில் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.