ஓவியர்களோடு இணைந்து சிறுவர் சிறுமியரின் கைவண்ணத்தால் அழகாகும் பெசன்ட் நகர் ஹெல்த் வாக் சாலை
சென்னை பெசன்ட் நகர் பகுதியில், 8 கி.மீ., நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு நவம்பரில் துவக்கி வைத்தார்.
ஜப்பான் நாட்டில் இருப்பதை போன்று சென்னையிலும் ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெசன்ட் அவென்யூ சாலையில் துவங்கி, கடற்கரை சாலை சென்று மீண்டும் சர்ச் சாலை, வேளாங்கண்ணி ஆலயம் வழி, 2 மற்றும் 3ம் அவென்யூ ஆல்காட் எதிரில் யூடர்ன் செய்து, திரும்பவும் அதே இடத்திற்கு வரும் வகையில், 8 கி.மீ., நீளத்திற்கு ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் ஒவ்வொரு நாளும், 8 கி.மீ., துாரம் நடந்தால், 10,000 அடி துாரம் வருகிறது.
நடைபாதையின் இருபுறமும் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஓய்வுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கி.மீ.,யிலும், நடப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள சுவர்களில் நடைபயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், நடை பயிற்சியினால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி இந்த சாலையை பராமரித்து வருகிறது.
அதன்படி, சுவர்களில் ஓவியம் வரையும் பணியை தொண்டு நிறுவனங்கள் செய்தன. ஓவியர்கள், தன்னார்வளர்களை கொண்டு ஆரம்பத்தில் இப்பணியை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டன.
அவ்வழியே பயணம் செய்யும் பொதுமக்கள் அழகிய ஓவியங்களை கண்டு ஓவியர்களோடு உரையாடி, அவர்களை பாராட்டியும் சென்றுள்ளனர்.
மேலும், சிலர் தாங்களும் இந்த சுவரில் ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டவே, தொண்டு நிறுவனங்கள் அவர்கள் கையில் தூரிகைகளை கொடுத்து ஓவியர்களாக்கியுள்ளனர்.
இதுவரை வீட்டில் சிறிய காகிதங்களில் தங்களது ஓவிய திறமையை வெளிப்படுத்திய பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் முதன்முறையாக பொதுவெளியில் பெரிய சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தினர்.
இவர்களுக்கு தேவையான பெயிண்ட், பிரஷ் ஆகியவற்றை தொண்டு நிறுவனங்களே வழங்கியுள்ளன.
ஓவியத்தில் ஆர்வமுள்ள தங்களுக்கு, முதன்முறையாக சுவர் ஓவியம் வரைவதற்கு வாய்ப்பளித்து, படைப்புகளை பொதுவெளியில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த பணிக்காக கடந்த 25 நாட்களாக ஓவியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 150 பேர் ஓவியம் வரைந்துள்ளனர். நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள சுவர்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்காக 2000 லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ப்ரியா தெரிவித்தார்.
ஓவியம் என்பது மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஓவியங்களால் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை சென்னையின் பல பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும். காலை வேளையில் நடைப்பயிற்சிக்காக இந்த சாலைக்கு வரும்போது இங்குள்ள ஓவியங்களை கண்டால் நமது சிறுவயது ஞாபகங்கள் வருகிறது. இந்த ஓவியங்களால் மனதிற்குள் உற்சாகத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் நாளை துவக்குவதால் மற்ற பணிகளில் முழு உற்சாகம் ஏற்படுவதாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிவித்தனர்.