ஸ்கூட்டர்களின் எஸ்.யு.வி; ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னையில் அறிமுகம்
சென்னை, 2 ஆகஸ்ட் 2024: ஸ்கூட்டர்களின் எஸ்.யு.வி என்று வர்ணிக்கப்படும் வகையில் கம்பீரமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ரிவர் நிறுவனத்தின் இண்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் பெங்களுரு மற்றும் ஹைதராபாத்தில் தங்களது ஷோரூம்களின் மூலம் இண்டி ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், தங்களது விற்பனையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யும் விதமாக சென்னை அண்ணா நகரில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அரவிந்த்மணி அந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜென் Z இளைஞர்களை கவரும் விதமாக உறுதியான கம்பீர தோற்றத்துடன் இண்டி என்று பெயரிடப்பட்டுள்ள எங்களது ரிவர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில், 4 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அராய் அங்கீகரித்ததின்படி 160 கிலோமீட்டர்கள் தூரம் செல்ல முடியும் என்று கூறினாலும், நமது சாலைகளில் 120 கிலோமீட்டர் தூரம் செல்லலாம். அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
மேலும், இளைஞர்களை கவரும் விதமாக வடிவைமைக்கப்பட்டுள்ள முன்பக்க எல்.இ.டி முகப்பு விளக்குகள், எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத வகையில் முதன் முறையாக 14 இன்ச் சக்கரங்கள் இந்த ஸ்கூட்டரின் அழகை மெருகூட்டுகிறது.
மொபைல் ஹோல்டர், அலாய் வீல்கள், எல்.இ.டி டிஸ்பிளே, மொபைல் சார்ஜிங் போர்ட், இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், முன்பக்கம் மற்றும் சீட்டிற்கு கீழே அகலமான ஸ்டோரேஜ் வசதி, பக்கவாட்டில் கூடுதலாக பேட்டிகள் இணைத்துக்கொள்ள வசதி, வாகனத்தோடு இணைந்தே வரும் லெக்-கார்டுகள், முன்பக்கம் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் இரண்டு ஹைடிராலிக் சஸ்பென்ஷன், ஓட்டுநர் கால் வைக்கும் இடத்தில் பொருட்கள் வைக்க அகலமான இடவசதி என்று அதிக வசதிகளை கொண்டுள்ளது.
5 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான பேட்டரி, அனைத்து காலநிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடம், ஐம்பதாயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டியுடன், நீளம், சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன.
சென்னை எக்ஸ் ஷோரூம் விலை 1,39,335 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.