ஆவினில் பிளாஸ்டிக் கப் தட்டுப்பாடு; கப் தயிர் விநியோகம் நிறுத்தம்
சென்னை, 16 ஜூலை 2024: அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிளாஸ்டிக் கப் தட்டுப்பாட்டின் காரணமாக பிளாஸ்டிக் கப்களில் தயிர் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஆவின் பால்பண்ணைகளில் இருந்து சென்னை முழுவதும் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
தயிரை பொறுத்தவரையில் வெவேறு அளவுகளில் பிளாஸ்டிக் கவர்களிலும், பிளாஸ்டிக் கப்புகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 200 மில்லி அளவு கொண்ட 28 ரூபாய்க்கு பிளாஸ்டிக் கப்புகளில் அடைத்து விற்கப்படும் தயிர் விநியோகம் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
கவர்களில் வரும் தயிரை காட்டிலும் கப்புகளில் வரும் தயிர் கையாள்வதில் எளிதாக இருப்பதால் அதிகளவில் விற்பனை நடைபெறுகிறது.
கப் தயிர் நிறுத்தம் குறித்து ஆவின் டீலர்கள் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும் என்று கடந்த இரண்டு வாரங்களாக கூறி வந்த நிலையில், தற்போது ஆவினில் பிளாஸ்டிக் கப் தட்டுப்பாடு இருப்பதாகவும், அதனால் தற்போதைய சூழ்நிலையில் கப் தயிர் விநியோகம் இருக்காது என்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாக ஆவின் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.