நாதஜோதி ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: சென்னை வீணவாதினி சம்பிரதாய சங்கீத அறக்கட்டளையில் நடைபெறுகிறது
சென்னை, 16 ஜூலை 2024: கர்நாடக இசையின் தலைசிறந்த வாக்கேயக்காரர்களில் ஒருவரான நாதஜோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் 250-வது பிறந்தநாள் விழாவை வீணவாதினி சம்பிரதாய சங்கீத அறக்கட்டளை இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி வரும் குரு பூர்ணிமா தினத்தன்று சென்னையில் தொடங்கவுள்ளது.
1775 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் தெய்வீக இசைக்கருவியான வீணையை வாசித்த ஒரு வாக்கேயக்காரர் ஆவார். பல்வேறு ராகங்களிலும் அவர் அமைத்துள்ள ஏறக்குறைய 480 இசை வடிவங்கள் கர்நாடக இசைக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழ்கின்றன. முத்துஸ்வாமி தீட்சிதரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த புகழ்பெற்ற வீணைக் கலைஞர்களான JT. ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோரால் நிறுவப்பட்ட வீணவாதினி, முத்துசுவாமி தீட்சிதர் “ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி” என்ற தலைப்பில் தனது முதல் பாடலை இயற்றிய திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில், இந்த ஓராண்டுகால விழாவை மிகவும் விமரிசையாகத் தொடங்கவுள்ளது. ஜெயராஜும் ஜெயஸ்ரீயும் தங்கள் சீடர்களுடன் அப்பாடல்களை கோவில் வளாகத்தில் பாடவுள்ளனர்.
ஜூலை மாதம் நடைபெறும் திருத்தணி நிகழ்ச்சியுடன் தொடங்கி, வீணவாதினியில் ஆண்டு முழுவதும் நிகழவிருக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் தீட்சிதர் குறித்த உபன்யாசம், நெய்வேலி சந்தானகோபாலன், அபிஷேக் ரகுராம் போன்ற மூத்த தலைவர்களின் விளக்கக் கச்சேரிகள், திறமையான கலைஞர்களைக் கொண்ட அகண்டம், அடுத்தடுத்த மாதங்களில் தீக்ஷிதர் கிருதிகள் கொண்ட அறைக் கச்சேரிகள், பட்டறைகள் ஆகியவையும் இடம்பெறும்.
வீணவாதினி குழு கல்வி நிறுவனங்களில் உரையாடல் அமர்வுகளை நடத்தி இசை உலகிற்கு தீட்சிதரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப முயலும். மூத்த குடிமக்கள் இல்லங்களிலும் மறுவாழ்வு நிலையங்களிலும் சிகிச்சை மற்றும் நல்வாழ்வு அமர்வுகளும் நடைபெறும்.
கூடுதலாக, அதிகமான மக்கள் கற்றுக்கொள்ளவும் இந்த இசை வடிவங்கள் வழங்கும் விலைமதிப்பற்ற அறிவு குறித்த தங்கள் புரிதலை விரிவுபடுத்திக்கொள்ளவும் ஏதுவாக, வீணையிலும் குரலிலும் தீக்ஷிதர் கிருதிகள் மீதான உலக அளவிலான போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
வீணை தம்பதிகளான ஜெயராஜ், ஜெயஸ்ரீ ஆகியோர் கொல்கத்தாவைச் சேர்ந்த மறைந்த அனந்தராம ஐயர், அவரது சகோதரி மறைந்த சம்பகவல்லி ஆகியோரின் சீடர்கள். அவர்கள் முத்துசுவாமி தீட்சிதரின் பேரனான அம்பி தீட்சிதரின் கீழ் குருகுலவாசம் பெற்ற தங்கள் தந்தை பிரம்மஸ்ரீ அனந்தகிருஷ்ண ஐயரிடம் இருந்து பெற்ற தீட்சிதர் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வந்தனர்.
ஜெயராஜ், ஜெய்ஸ்ரீ ஆகியோர் தங்கள் அமைப்பான வீணைவாதினி மூலம், குறிப்பாக வீணை வாசிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, தீக்ஷிதர் பாடல்களைப் பாதுகாப்பதற்கும், பரப்புவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் பாடுபட்டுள்ளனர். இத்தம்பதியினர், DD தமிழில் தீட்சிதரின் இசைப்பாடல்கள் அல்லது கிருதிகளில் பொதிந்துள்ள இசை, பாடல் மற்றும் புராணம் சார்ந்த தகவல்கள் குறித்த விளக்கங்களைக் கொண்ட 26-எபிசோட் தொடரான ”வைனிக காயகா” நிகழ்ச்சி மூலம் ஏராளமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். வீணாவதினி மூலம், ஜெயராஜ், ஜெயஸ்ரீ ஆகியோர் கருப்பொருள் சார்ந்த கச்சேரிகளை வழங்குகிறார்கள், தீட்சிதர் இசை வடிவங்களைப் பரப்பும் இசை விழாக்களை நடத்துகிறார்கள், நமது எதிர்கால சந்ததியினருக்காக வீணையில் இசை வடிவங்களின் அசலான பதிப்புகளை வாசித்து, காப்பகப்படுத்துகிறார்கள், மேலும் இந்தச் சிறப்பு இசை வடிவங்களை தங்கள் VeenaJJ செயலி மூலம் ஆண்ட்ராய்டு, ios இயங்குதளங்களில் இசை உலகிற்கு அளிக்கிறார்கள். 250-வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, இந்த ஓராண்டு நிகழ்வின் முடிவில் 250 பாடல்கள் VeenaJJ செயலியில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முத்துசுவாமி தீட்சிதரின் யாத்திரைப் பாதையைத் தொடர்ந்துசெல்லும் பயணத்தையும் இத்தம்பதியினர் தொடங்கினர். தங்கள் சீடர்களுடன் இணைந்து, அவர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று, தீட்சிதரின் ஒவ்வொரு முத்திரைப் பாடலையும் அவர் பாட எண்ணிய கருவறையிலேயே பாடி வருகின்றனர். தீட்சிதரின் 200-க்கும் மேற்பட்ட பாடல்கள் இந்த வீணை தம்பதியினரால் உலகம் முழுவதும் உள்ள அவர்களது சீடர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன. வீணாவதினியின் வரவிருக்கும் பாட்காஸ்ட் தொடரில் இந்த பாடல்கள் சிறப்பிக்கப்படும்.