ஈ.பி.எஸ். பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தங்கத்தேர் இழுத்து அதிமுக-வினர் வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டரை கே.மனோகரன் தலைமையில் கழகப் பொதுச் செயலாளராக ஒருமனதாக எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவருமான டி.கே.எம்.சின்னையா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், குட்டி என்கிற நந்தகுமார், திருப்போரூர் பேரூர் கழக செயலாளர் ஜி.முத்து உள்ளிட்ட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தெரிவித்ததாவது:
எடப்பாடியாரை பொருத்தவரை ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். தமிழக மக்களை ஒருங்கிணைத்து பார்க்க கூடியவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரது எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இருவரும் தலைவர்களின் ஆசியோடு தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் எடப்பாடியார்.
அதற்காக திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எடப்பாடியார் தலைமையில் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி அருளோடு மக்கள் விரும்பும் சிறப்பான ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.