ஏஜி&பி பிரதம்-ன் “தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்” எரிவாயு குழாய் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம், 6 செப்டம்பர் 2024: பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள இயற்கை கியாஸ் குழாய் பாதுகாப்பு மற்றும் கியாஸ் கசிவு சம்பவங்களை குறைக்க, இந்தியாவின் முன்னணி நகர கியாஸ் விநியோகஸ்தரான ஏஜி&பி பிரதம் நிறுவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு அதிகாரிகளுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தியது.
இதன் முக்கிய நோக்கம், குறிப்பாக ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ‘டயல் பிபோர் யூ டிக்’ என்னும் ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்பதை மக்களிடையே விழிப்புணர்வு எடுத்துச் செல்வதாகும். இதன் மூலம் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு கியாஸ் குழாய்களுக்கு மூன்றாம் தரப்பினரால் எந்தவித சேதமும் ஏற்படாமல் அதை தடுப்பதாகும்.
மேலும் இத்துடன், சாலைப் பாதுகாப்பு குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், சாலையில் எந்தவொரு பள்ளம் தோண்டும் பணியைத் தொடங்கும் முன் தொழில்முறை வழிகாட்டுதல்களை பின்பற்றவும், கியாஸ் குழாய்களில் விபத்துக்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் இந்த விழிப்புணர்வு நடைபெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்ட் சார்லஸ் சாம் ராஜதுரை, காஞ்சிபுரம் ஆர்டிஓ மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பன்னீர்செல்வம், ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் செந்தில், ஜேசிபி ஆபரேட்டர் சங்கத் தலைவர் செல்வமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்ட் சார்லஸ் சாம் ராஜதுரை பேசுகையில், “நமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது நம் அனைவருக்கும் முக்கிய பொறுப்பாகும். ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ‘டயல் பிபோர் யூ டிக்’ திட்டமானது, அத்தியாவசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது வெறுமனே ஒரு பரிந்துரை அல்ல – இது ஐபிசி பிரிவுகள் 285 மற்றும் 336ன் கீழ் சட்டப்பூர்வக் கடமையாகும், எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் பள்ளம் தோண்டும்போது குழாய்களை சேதப்படுத்தினால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். குழாய்கள் சேதம் அடைவதற்கான காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் மற்றும் இம்மாவட்டத்தின் கியாஸ் குழாய்கள் பாதுகாப்பாக பராமரிப்பதையும் எங்கள் குழுவின் முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்வோம் என்று பேசினார்.
காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், விபத்துகள் மற்றும் பாதுகாப்பு மீறல்களை தடுத்தல் என்ற முழக்கத்துடன் விரிவான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெறுவது வரவேற்கத்தக்கது என்றார்.
இந்நிறுவனத்தின் காஞ்சிபுரம் பகுதித் தலைவர் திருக்குமரன் பேசுகையில், இந்நிகழ்ச்சி குழாய் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்தது. குழாய்களின் சேதத்தைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு சம்பவங்கள் மூன்றாம் தரப்பினரால் எந்தவித அனுமதியும் இல்லாமல் பள்ளம் தோண்டுவதால் ஏற்படுகிறது. குழாய் தொடர்பான அனைத்து வேலைகளிலும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்களுடைய ‘டயல் பிபோர் யூ டிக்’ முயற்சியின் மூலம், எந்தவொரு பள்ளம் தோண்ட துவங்குவதற்கு முன்பு எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தனிநபர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை காயங்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் எங்கள் பைப்லைன் நெட்வொர்க்கை பாதுகாக்கிறது. விழிப்புணர்வை வளர்ப்பது மற்றும் குழாய் உள்கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் முக்கிய பொறுப்பு ஆகும் என்றார்.
ஏஜி&பி பிரதம் இந்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்தவொரு பள்ளம் தோண்டுவதற்கு அது சம்பந்தப்பட்டவர்கள் இந்நிறுவனத்தின் 1800 2022 999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.