இதுவரை மத்திய அரசு கொடுத்துள்ள பணம் எங்கே சென்றது என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்; அண்ணாமலை பேட்டி
மழை நீர் வடிகால் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என இதுவரை மத்திய அரசு கொடுத்துள்ள பணம் எங்கே சென்றது என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்; அண்ணாமலை பேட்டி
அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மழை வெள்ளம் குறித்து பொய் சொல்லி மக்களின் கோபத்திற்கு ஆளாகின்றனர் எனவும் பேச்சு
சென்னை ஓ.எம்.ஆர், ராஜீவ்காந்தி சாலை, கார்ப்பக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்கட்சியின் 198 ஆவது வார்டு கவுன்சிலர் லியோ சுந்தரம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், பாஜக-வின் தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாஜக தொண்டர்கள் நிவாரண பொருட்களை வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
சென்னையின் மைய பகுதிகளை விட, புறநகர் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் இப்பகுதிகளில் கவனம் செலுத்திவதில்லை, அதனை பாஜக மேற்கொண்டுள்ளது.
சென்னை 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் கூறியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் இதுபோன்ற மிகைப்படுத்திய பேச்சுதான் மக்களிடம் அரசின் மீதான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு 98 சதவீத வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறிய அமைச்சர் கே.என்.நேரு, 42 சதவீத பணிகளே முடிந்ததாக நேற்று கூறியுள்ளார். அரசே பொய் சொன்னால் சாமானியன் எப்படி நம்புவான்.
இதுவே மக்களின் கோபத்திற்கே காரணம், அதனால் தான் மக்கள் போராட தள்ளப்பட்டனர்.
4,397 கோடி ரூபாய் 2015 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிக்காகவும், ஸ்மார்ட் சிட்டி பணிக்காகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியுள்ளது. இந்த பணத்திற்கெல்லாம் கணக்கு எங்கே, எத்தனை நாளைக்கு மத்திய அரசை குறை சொல்லி வண்டி ஓட்டுவாய், இதை நான் கேட்கவில்லை, பொதுமக்கள் கேட்கின்றனர்.
தமிழக அரசின் சார்பில் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் 5060 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 24 மணிநேரத்தில் மத்திய அரசு முதல்கட்டமாக 450 கோடி, 560 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக அரசின் அறிக்கையை கொண்டு சென்னையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்வார்கள் என தெரிவித்தார்.
பேட்டி: அண்ணாமலை (தலைவர், தமிழக பாஜக)