சீனாவில் ஒலித்த இந்திய தேசிய கீதம்; விளையாட்டு வீரர் அவிக்ஷித் விஜய் நெகிழ்ச்சி
ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் சார்பாக ஆண்டுதோறும் சேரியட் விருதுகள் (Chariot Awards) வழங்கப்பட்டு வருகிறது.
தொழில்துறை, வாழ்நாள் சாதனையாளர், தொழில் விளையாட்டில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சேரியட் விருதுகள் 2024 சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
வொகேஷனல் எக்ஸலன்ஸ் பிரிவில் விஜய் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், விஜயகோபால் ரெட்டிக்கும், வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர் பிரிவில் சங்கர நேத்ராலயா போர்டு ஆஃப் கவர்னர் மருத்துவர் லிங்கம் கோபாலுக்கும் வழங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான விருதும், கர்நாடக பாடகி ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான “Chariot Awards” வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் தங்களது அனுபவங்களை மேடையில் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், கௌரவ விருந்தினர்களாக ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின், கங்காதரன், ரொட்டேரியன்கள் மஞ்சு குல்கர்னி, மகேஸ்வரன், ஹரிஷ் மகாதேவன், குல்தீப் சேத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவிக்ஷித் விஜய் விஸ்வநாத், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் நான் தங்கம் வென்றபோது, நம் இந்திய நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது மனதில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறிய அவர், தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.