சைக்கிளில் இந்தியாவை சுற்றிவரும் வெளிநாட்டு தம்பதி
இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவை சுற்றி வரும் இத்தாலி நாட்டின் தம்பதிகள் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தனர்
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் செலஞ்சீவ், இவரது மனைவி பெடரிகா பிரைட், இவர்களுக்கு 7 வயதில் டைஷானோ என்ற மகனும், காஸ்டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது.
செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவரது நிறுவனத்தில் இரண்டு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார்.
நேராக கேரள மாநிலம் வந்த இவர்கள், கேரளா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
சைக்கிள் பயணத்தில் புதிய அனுபவம் கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் சைக்கிளிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
மாமல்லபுரத்தில் உள்ள புராதான சிற்பங்களை கண்டு வியந்த அவர்கள், அங்கிருந்து நேராக திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு காஞ்சிபுரம் கோவில் தளங்களை பார்வையிட செல்வதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஆந்திரா, மத்திய பிரதேஷ், குஜராத், பீகார், டெல்லி, உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சைக்கிள் மூலமாகவே தன் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நல்ல நினைவுகளை சேர்க்கும் வகையில் விடுமுறை தினங்களை கழித்து வருவதாக தெரிவித்தார்.
தான் கை நிறைய சம்பாதித்தாலும் பல நாடுகளுக்கு விமானம் மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ சென்று பொழுதை கழித்திருக்கலாம் ஆனால் இயற்கை ரசிக்கவே சைக்கிளில் பயணம் மேற்கொள்வதாகவும் இது ஒரு புது அனுபவத்தை தருவதாகவும் தம்பதிகள் தெரிவித்தனர்.