திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் தெப்ப உற்சவம்; முன்னெச்சரிக்கை ஏற்பாடாக குளக்கரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூரில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 27-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.
கடந்த ஞாயிறன்று தேர் திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் கடைசி நாளான இன்று தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், உற்சவ மூர்த்தி தாயாருடன் இசை வாத்தியங்கள் முழங்க தெப்பத்தில் வைக்கப்பட்டு குளத்தில் பவனி வந்தார்.
வழக்கமாக குளக்கரையின் படிக்கட்டில் அமர்ந்து தெப்ப திருவிழாவினை காண பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வந்தது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சேற்றில் சிக்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடாக குளக்கரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், குளக்கரையை சுற்றிலும் நின்றவாறு பொதுமக்கள் தெப்பத்தில் வளம் வந்த உற்சவரை வழிபட்டனர்.
அதேபோல் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணித்துறை வீரர்கள் படகு மூலம் தெப்பத்துடன் குளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் பல இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் கடைசி நாள் என்பதால் கடை தெருக்களில் பொருட்களை வாங்க ஆர்வமுடன் பொதுமக்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது.