மருத்துவ மாணவர்களுக்கு 1.7 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியது மெட்ரோபொலிஸ் நிறுவனம்
மருத்துவ ஆய்வகத்துறையில் நாற்பது ஆண்டுகாலமாக இயங்கி வரும் மெட்ரோபொலிஸ் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் எனப்படும் சமூக பங்களிப்பு சேவையின் வாயிலாக மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சுமார் 1.7 கோடி ரூபாய் அளவில் கல்விக்கான உதவித்தொகையை வழங்கியுள்ளது.
மெட்ரோபொலிஸ் நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான மெட்ரோபொலிஸ் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் மெட்என்கேஜ் (MedEngage) நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்தாண்டு மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஆறாவது ஆண்டாக இம்முறை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
டெலாய்ட் என்னும் மென்பொருள் நிறுவனம் மாணவர் தணிக்கையை மேற்கொண்டது. MBBS, MD, MS, DNB பயிலும் மாணவர்களும், மருத்துவ துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களும், இன்டெர்ன்ஷிப் செய்யும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி இந்தாண்டு நாடுமுழுவதிழும் 29 மாநிலங்களை சேர்ந்த சுமார் 6019 மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களின் மதிப்பெண்கள், மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழல், மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 301 மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 60 சதவீதத்தினர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழக மருத்துவ கல்வி இயக்ககத்தின் நோடல் அதிகாரி சண்முகப்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையினை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுரேந்திரன் செம்மங்கோட்டில், மெட்ரோபொலிஸ் அறக்கட்டளையின் தலைவர் துரு ஷா, மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் துறையின் தலைவர் கீர்த்தி சதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.