நீட் நுழைவு தேர்வில் அகில இந்திய அளவிலும், தமிழக பெண்கள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்த சென்னை மாணவி
சென்னை, 7-ஜூன்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. நாடுமுழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த நுழைவு தேர்வை எழுதியிருந்தனர்.
இத்தேர்வின் முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றனர்.
அதேபோல், சென்னை தாம்பரம் பகுதியில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி ஷைலஜா 720-க்கு 720 மதிப்பெண்களை பெற்று அகில இந்திய அளவில் முதலிட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பெண்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ளார்.
மாணவி ஷைலஜா பயின்ற தனியார் நீட் பயிற்சி நிறுவனமான ஆலென் பயிற்சி மையத்தின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவருடன் அதே பயிற்சி மையத்தில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் பாராட்டப்பெற்றனர்.
இதுகுறித்து மாணவி ஷைலஜா கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலென் பயிற்சி மையத்தில் நீட் நுழைவு தேர்விற்காக பயிற்சி பெற்று வந்ததாக தெரிவித்தார். தனது பெற்றோர்கள் மருத்துவர்களாக உள்ள நிலையில், தந்தை எனக்காக ஒரு மாத காலத்திற்கு விடுப்பு எடுத்து நீட் பயிற்சிக்காக தனக்கு உதவியாக தெரிவித்தார். மேலும், ஆலென் பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களாக கருதி எந்நேரத்திலும் தனக்கு படிப்பு சம்பந்தமாக நேரம் பார்க்காமல் உதவி செய்ததாக கூறினார்.
ஆலென் பயிற்சி சென்னையில் துவங்கி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது ஒரு மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களில் 269 பேர் அதிக மதிப்பெண்களை பெற்றிருப்பதாக ஆலென் பயிற்சி மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.