தமிழ் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங்கிற்கு சீட் வழங்க வேண்டாம் என அதிமுக பகுதி செயலாளர்கள் எதிர்ப்பு

சென்னை: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் உள்ளக கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற பலரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங்க்கு சீட் வழங்கக் கூடாது என்று சில பகுதி கழகச் செயலாளர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பு ரீதியாக 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரோம்பேட்டை, திருநீர்மலை, பம்மல், அஸ்தினாபுரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 பகுதி கழகச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங்கிற்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது எனக் கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, தன்சிங்கை ஆதரிக்கும் தரப்பும், அவருக்கு எதிராக இருக்கும் தரப்பும் தனித்தனியாக கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஒருதரப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கே மற்றொரு தரப்பினர் சென்று நிகழ்ச்சிகள் நடத்துவதால் போட்டி நிலை உருவாகியுள்ளது.

பல்லாவரம் தொகுதியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசிப்பதால், இந்த முறை அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், அதிமுகவின் இரு தரப்பினரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் எதிரெதிராக நிகழ்ச்சிகள் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “கட்சி ஒன்று, நிகழ்ச்சி இரண்டு” என்ற நிலை ஏற்பட்டதாக பொதுமக்களே வியப்புத் தெரிவித்தனர்.

இதனுடன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவருடன் இருந்த சில கட்சி நிர்வாகிகள் தற்போது அவருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல்லாவரம் தொகுதியில் சிறுபான்மை வாக்காளர்கள் கணிசமாக உள்ள நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் எதிர்கால தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இந்தத் தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாமக அல்லது பாஜகக்கு ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பும் கட்சி தலைமையிடம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *