General

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து 16,932 பேருந்துகள் இயக்கப்படும்; போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்:

வரும் 12-ம் தேதி முதல் வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 14 வரை இயக்கப்படுகிறது.
இதில்,சென்னையில் இருந்து 10,749 பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் பிற மாவட்ட ஊர்களிலிருந்து 6,183 பேருந்துகள் என ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும்
16,932 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 15,619 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னையில் மாதவரம், கே.கே.நகர் பணிமனை, தாம்பரம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய ஐந்து இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் 12 முன்பதிவு மையங்கள் செயல்படும். மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்க 94450 14450 எண்ணும் 94450 14436 தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் தொடர்பாக 044 24749002 / 044 26280445 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் ஆம்னி பேருந்து உரிமையாளர் கட்டணம் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், 6 பேருந்து நிறுவனத்துடன் பேசி இது தொடர்பாக எச்சரிக்கை செய்து இருப்பதாகவும், கட்டணம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், கூடுதலான பேருந்துகள் கையிருப்பில் இருக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *