ஷேர் ஆட்டோ வருமா வராதா…தெரிஞ்சிக்கலாம் QPo Cabs-ல
சென்னை: சென்னைல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பொதுவாக மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சி போன்றவற்றையே பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே சத்தமில்லாமல் இருசக்கர டாக்சி பயன்பாடும் பெருகி வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள்ள போக்குவரத்திற்காக, எளிமையான, குறைந்த கட்டணத்தில், ரொம்ப நேரம் காத்திருக்க தேவையில்லாத, துரிதமான பயணத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் நமக்கு ஒரு பெரிய துணையா இருக்கு.
சாதாரண ஆட்டோக்களை போல் முறைப்படுத்தப்பட்ட போக்குவரத்தாக இது இல்லைனாலும், இவங்க இல்லைனா ஒரு ஏரியாவுக்குள்ள போக்குவரத்து இன்றைக்கு முடங்குற அளவுக்கு ஷேர் ஆட்டோ தேவை இருக்கு.
பள்ளி செல்லும் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு போகிறவர்கள், மார்க்கெட் செல்பவர்கள், முதியவர்கள் என பலரின் விருப்பமான போக்குவரத்து தேர்வாகியிருக்கிறது ஷேர் ஆட்டோ.
இருந்தாலும், திருவான்மியூரிலிருந்து அம்பத்தூருக்கு பேருந்தில் பயணிக்கும் ஒருவர், அம்பத்தூரில் ஷேர் ஆட்டோ எந்தெந்த வழித்தடங்களில் இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்வது சற்று சிரமமான விஷயம்.
இது அம்பத்தூருக்கு மட்டுமில்லாமல் அம்பத்தூரில் வசிக்கும் நபர் ஒருவர் திருவான்மியூர் அல்லது சென்னையின் மற்ற பகுதிகளுக்கு சென்றாலும் அங்குள்ள ஷேர் ஆட்டோ வழித்தடங்களை கண்டுகொள்வது சிரமமாக தான் இருக்கும்.
மக்களின் இந்த பிரச்சினையை கையில் எடுத்த கல்லூரி மாணவர்கள் இதற்காக மொபைல் ஆப் ஒன்றினை உருவாக்க முயற்சி செய்தனர். சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அமல், ஜெய் மற்றும் சென்னை ஐ.ஐ.டி மாணவர் அஸ்பாக் ஆகியோர் இணைந்து ஒரு சிறிய முதலீட்டில் Unovay Technologies Private Limited என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினர்.
தொடர்ந்து பொது போக்குவரத்து தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு கிடைத்த தரவுகளை வைத்து QPo Cabs என்னும் மொபைல் செயலியை உருவாக்கினர்.
Download the app: https://play.google.com/store/search?q=qpo+cabs&c=apps&hl=en
ஒரு குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை பற்றி தெரிந்துகொள்வதே இந்த ஆப்-ன் நோக்கமாகும்.
QPo Cabs ஆப் தற்போது ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. மற்ற பிரபல டாக்சி/ஆட்டோ புக்கிங் ஆப்களை போல் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து தங்களது தரவுகளை உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆப்-ன் மூலம் ஷேர் ஆட்டோ புக் செய்ய முடியாது என்றாலும், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் ஷேர் ஆட்டோக்கள் உள்ளனவா, தங்கள் பகுதிக்கு ஷேர் ஆட்டோ வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும், எத்தனை ஷேர் ஆட்டோக்கள் வழித்தடத்தில் உள்ளன போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
அதே போல், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் பயணிகள் கிடைக்கவில்லை என்று ஒரே இடத்தில் நிற்பதை தவிர்ப்பதற்காக, எந்தெந்த இடத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர், எவ்வளவு பேர் காத்திருக்கின்றனர் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளை இந்த செயலி ஒருங்கிணைத்து பயணத்தை எளிதாக்குகிறது.
முதற்கட்டமாக சென்னை மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை உள்ள வழித்தடங்களில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களின் பயணத்தை கண்காணிக்க முடியும். இதுவரை 250 பயணிகளும், 35 ஷேர் ஆட்டுனர்களும் தங்களது செயலியை பயன்படுத்தி வருவதாக மாணவ முதலாளிகள் தெரிவித்தனர்.
இந்த செயலியின் மூலம் ஷேர் ஆட்டோவிற்காக காத்திருக்கும் பயணியின் பெயர், செல்போன் எண், ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்கு பகிரப்படாத காரணத்தினால் தனிநபரின் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இரவு நேரங்களில் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக கூடுதல் அம்சங்களை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செயலி முற்றிலும் இலவசம், பயணிகளிடமோ அல்லது ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிமிருந்தோ எவ்வித கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுவதில்லை. வருங்காலங்களில் இந்த செயலியில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வருவாய் உருவாக்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ஓ.எம்.ஆர் வழித்தடத்தில் செயல்படும் இந்த செயலி, சென்னையின் மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. தங்களின் இந்த முயற்சிக்கு பெறும் நிறுவனங்களின் முதலீடு செய்ய விரும்பினால் வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.