முற்றிய புற்றுநோய்க்கு CAR-T செல் சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனையில் வெற்றி
சென்னை: துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றமாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் ஆகியவை ‘CAR-T செல் சிகிச்சை’ எனப்படும் நவீன நோயெதிர்ப்பு சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கியுள்ளன. வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இருந்த இரு முதிய புற்றுநோயாளிகள் இச்சிகிச்சையின் மூலம் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.
CAR-T (Chimeric Antigen Receptor T-Cell) சிகிச்சை என்பது, நோயாளியின் சொந்த ‘T’ நோயெதிர்ப்பு செல்களை மாற்றியமைத்து, புற்றுநோய் செல்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு அழிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் தனிப்பயன் சிகிச்சை முறையாகும். குறிப்பாக முற்றிய அல்லது மீண்டும் தாக்கும் ரத்தப் புற்றுநோய்களுக்கு இது புதிய நம்பிக்கையாக கருதப்படுகிறது.
70 வயதான லிம்போமா நோயாளி ஒருவருக்கு இதயப் பிரச்சினைகள் காரணமாக முழுமையான கீமோதெரபி அளிக்க முடியாத சூழலில், அடையார் எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் CAR-T சிகிச்சை வழங்கப்பட்டு வெற்றியடைந்தது. மேலும், வேகமாக பரவும் தீவிர நிணநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 62 வயது நோயாளிக்கும், வழக்கமான கீமோதெரபி பலனளிக்காத நிலையில், எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் CAR-T சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல விளைவு கிடைத்துள்ளது.
இது குறித்து எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் மருத்துவ புற்றுநோயியல் பிரிவு இயக்குநர் டாக்டர் எம்.ஏ. ராஜா தெரிவித்ததாவது: “முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்களுக்கும் சிகிச்சை வாய்ப்புகள் உள்ளன. நோயாளி பாதுகாப்பு, தனிப்பட்ட கவனம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி CAR-T திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ரத்த-புற்றுநோயியல் (BMT) நிபுணர் டாக்டர் எம். கோபிநாதன் கூறுகையில், நோயாளியின் ரத்தத்திலிருந்து ‘T’ செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, மேம்பட்ட ஆய்வகத்தில் புற்றுநோய் செல்களை தாக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றன என்றார். இந்த சிகிச்சைக்கு அபெரெசிஸ் மையம், GMP சான்றளிக்கப்பட்ட ஆய்வகம், பிரத்யேக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை போக்குவரத்து வசதிகள் அவசியம் எனவும் அவர் விளக்கினார்.
CAR-T சிகிச்சை திட்ட இயக்குநரும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவப் புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் சுமன் கல்யாண் N. கூறுகையில், “துல்லியமான மருத்துவமே புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலம். குறைந்த செலவில் CAR-T சிகிச்சை வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம். காப்பீட்டு ஆதரவுடன் நோயாளிகள் இந்த மேம்பட்ட சிகிச்சையை பெற முடிகிறது,” என்றார்.
இந்த முயற்சி, சென்னை சர்வதேச மருத்துவ சுற்றுலா மையமாக திகழும் நிலையில் அதன் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவின் திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளின் ஆதரவுடன் CAR-T சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

