கல்லூரி மாணவிகளுக்கு இளைஞர்களுக்கு இணையவழி பாலியல் குற்றங்கள், மனிதக் கடத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை: இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனம் (ICWO), Just Rights for Children (JRC) மற்றும் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி (CTTE) இணைந்து, மாணவிகளிடையே இணையவழி பாலியல் குற்றங்கள், பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை சென்னை பெரம்பூரில் உள்ள CTTE மகளிர் கல்லூரியில் நடத்தின.
நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இணையவழி குற்றங்கள் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான ஆபத்துகளை அடையாளம் கண்டு தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
CTTE மகளிர் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்புரையாற்றினார். பெண்களுக்கு சுதந்திரத்துடன், தங்களை ஆபத்துகள் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மனிதக் கடத்தல் தொடர்பான சர்வதேச நிபுணரும், ஓய்வுபெற்ற IPS அதிகாரியுமான பி.எம். நாயர், இணையவழி பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் குறித்து பேசினார். வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஏமாற்றப்படவோ, கட்டாயப்படுத்தப்படவோ வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ICWO நிறுவனர் செயலாளர் ஏ.ஜே. ஹரிஹரன், மனிதக் கடத்தலைத் தடுப்பதில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். ICWO-வின் Anti-Human Trafficking Clubs (AHTCs) திட்டம் தற்போது 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பது நோக்கமல்ல என்றும், அதனை பாதுகாப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்துவதற்கான திறனை இளைஞர்களுக்கு வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிடப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்றனர். CTTE மகளிர் கல்லூரியின் மனிதநேயக் கழகம் சார்பில் இணையவழி துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்த்துகையும் நடைபெற்றது.
மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டலைத் தடுப்பதில் இளைஞர்கள், குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

