அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்கிய IGP Engineers
சென்னை: ஐஜிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ், சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு (Cancer Institute – WIA) ₹25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, ஐஜிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஜி. கணேசன், புற்றுநோய் மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இயக்குநருமான டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்வில் நிறுவனத்தின் நிதிப் பிரிவு துணைப் பொது மேலாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்கி வரும் அடையாறு புற்றுநோய் மையத்தின் மருத்துவப் பணிகளுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஜி. கணேசன் கூறுகையில், சமூகத்திற்குத் திருப்பி அளிப்பது நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பு என்றும், எளிய மக்களுக்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சை கிடைக்கச் செய்யும் அடையாறு புற்றுநோய் மையத்தின் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
ஐஜிபி இன்ஜினியர்ஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
அடையாறு புற்றுநோய் மையம், ஆரம்பகட்டப் பரிசோதனை, நவீன புற்றுநோய் சிகிச்சை, நோய்த்தணிப்பு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

