5,500 கோடி முதலீட்டில் 100 ஷோரூம்களை திறக்கிறது ஜோஸ் ஆலுக்காஸ்
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில், அந்நிறுவனத்தின் குளோபல் அம்பாஸிடரும், நடிகருமான மாதவன் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் மற்றும் அவரது மகன்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக, ரூபாய் 5,500 கோடி முதலீட்டில் உலகம் முழுவதும் சுமார் 100 புதிய நகை விற்பனை ஷோரூம்களை திறக்கவுள்ளதாகவும், நடிகர் மாதவன் உலகளவிலான ப்ராண்ட் அம்பாசிடராக தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடிகர் மாதவன் பேசியபோது, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் உடனடி வளர்ச்சியை காட்டி மக்களை தன்பக்கம் இழுக்கவில்லை. நிலையான நீடித்த நம்பிக்கையை வைத்து அவர்கள் உழைப்பை வைத்து முன்னேறி உள்ளனர். 60 வருடங்களாக அவர்கள் இந்த தொழிலில் உள்ளனர். தற்போது 50 கடைகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக 100 கடைகளை திறக்க உள்ளனர். உலக அளவில் இந்தியாவின் நகைகள் செல்ல உள்ளன என தெரிவித்தார்.
அந்நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் ஆலுகாஸ் பேசுகையில், கேரள மாநிலம் கொள்ளத்தில் நாங்கள் ஆரம்ப காலத்தில் ஒரு புதிய கடையை திறந்ததும் மக்கள் எங்களை தேடி வந்தனர். அவர்களால் தான் இந்தளவுக்கு வர முடிந்தது. தற்போது இந்த தொழிலில் நான் இல்லை எங்கள் மகன்கள் தான் பார்த்து வருகின்றனர் என கூறினார்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வர்கீஸ் ஆலுக்காஸ் பேசியபோது, தென்னிந்தியவில் 50-க்கும் மேற்பட்ட ஷோரூமகள் உள்ளது, வரும் காலங்களில் 100 புதிய கிளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் வர உள்ளது என கூறிய அவர் தென் இந்தியாவில் அதிக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
வாடிக்கையாளர்கள் எங்களது நகைகளை விரும்புகிறார்கள் அவர்களுக்கு எங்கள் நகைகள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அவர் தொழிலாளர்களின் உழைப்பு தான் எங்கள் வெற்றிக்கு காரணம் என அந்நிறுவனத்தின் மற்றுமொரு நிர்வாக இயக்குனருமான பால்.ஜெ.ஆலுக்காஸ் கூறினார்.