பார்கின்சன் நோய்க்கு யோகா-வுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை; ரேலா மருத்துவமனை ஏற்பாடு
பார்கின்சன் என்னும் நடுக்குவாத நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக பார்க்கின்சன் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள ரேலா மருத்துவமனையில் பார்கின்சன் நோய்க்காக “இயக்க கோளாறுகள் மற்றும் DBS கருவி மேம்படுத்துதல்” என்னும் பிரத்யேக சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், ரேலா மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முஹமது ரேலா, திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ், தாம்பரம் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் பவன் குமார் ரெட்டி, சத்யானந்தா யோகா மையத்தின் நிறுவனர் சன்யாசி சிவரிழி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பார்கின்சன் நோய்க்கான பிரத்யேக சிகிச்சை மையத்தை துவக்கி வைத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேலா மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் ஷங்கர் பாலகிருஷ்ணன்,
ரேலா மருத்துவமனையில் ஆண்டுதோறும் பார்கின்சன் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு பார்க்கின்சன் நோய்க்கு யோகாவுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பார்கின்சன் நோய்க்காக துவங்கப்பட்டுள்ள பிரத்யேக மையத்தில் நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளோடு சேர்த்து யோகா தெரபி மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது.
நடுக்கம், மந்த நிலை, கை கால் இறுக்கம், சமநிலை தவறுதல் உள்ளிட்டவை பார்கின்சன் நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகளாக உள்ளன.
பெரும்பாலும் 60 வயதை கடந்த முதியவர்களை இந்நோய் தாக்குகிறது. சில சமயங்களில் இளையோருக்கு வரக்கூடும் என்பதால் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலையில் நரம்பு செல்கள் தானாகவே அழிந்து விடுவதால், உடலில் டோகோமின் என்னும் வேதிப்பொருள் குறைந்து விடும். இதனை ஈடு செய்வதற்காக நோயாளிகளுக்கு டோகோமின் மருந்துகளும், போதுமான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
டோகோமின் மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகம் என்பதால், நோயாளிகள் பலர் Deep Brain Stimulation
எனப்படும் செயலிழந்த மூளை நரம்புகளை தூண்டும் கருவியை மூளையில் பொறுத்திக்கொள்கின்றனர்.
இதய பாதிப்பிற்கு எவ்வாறு பேஸ்மேக்கர் என்னும் கருவி பொருத்தப்படுகிறதோ, அதேபோன்று மூளை பாதிப்பிற்கு DBS என்னும் கருவி பொருத்தப்படுகிறது.
இந்த கருவியில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்கும், அதன் செயல்பாட்டினை கட்டுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்றவற்றினை ரேலா மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளலாம்.
வியாழன் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த சிகிச்சை மையம் செயல்படும். மேலும், பார்கின்சன் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரம் மாதம் முழுவதும் இலவச பார்கின்சன் நோய் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.