தமிழ் செய்திகள்

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய அதிநவீன டிஜிட்டல் மேமோகிராபி சாதனம் – வி.எஸ். மருத்துவமனை அறிமுகம்

சென்னை: மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நோக்கில், குறைந்த அளவிலான கதிர்வீச்சுடன் கூடிய அதிநவீன 2டி டிஜிட்டல் மேமோகிராபி பரிசோதனை சாதனத்தை வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதம் முழுவதும் பொருளாதார வசதியற்ற மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனை வழங்கப்படும் என மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்தப் புதிய சாதனம் மார்பகத் திசுக்களை உயர் துல்லியத்துடன் படம்பிடித்து, நுண்ணிய கால்சியம் படிவங்கள் உள்ளிட்ட அசாதாரண மாற்றங்களைக் கண்டறிய உதவும். மேலும், நோயாளிகளின் சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இதில், உடலுக்கு ஏற்ற அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் தானியங்கி அழுத்த நீக்க வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இதன் தொடக்க விழாவில் பேசிய வி.எஸ். மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன், புள்ளிவிவரங்களின்படி சுமார் 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் காரணமாக சுமார் 13 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.

மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அசாதாரண மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு இந்த அதிநவீன டிஜிட்டல் மேமோகிராபி சாதனம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *