காசாகிராண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் CMUN 2026 மாநாடு; 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: காசாகிராண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் முதல் Casagrand Model United Nations (CMUN) 2026 மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சென்னையின் பல்வேறு முன்னணி பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டனர்.
மாநாட்டின் நிறைவு விழாவில், ராஜதந்திரம், தலைமைத்துவம், பேச்சுத் திறன், பேச்சுவார்த்தை நடத்தும் திறன் மற்றும் விமர்சனச் சிந்தனை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த மாநாட்டில் பங்கேற்ற மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளாக செயல்பட்டு, சர்வதேச ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி, உலக அமைதி உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகளை முன்வைத்து, தீர்மான வரைவு ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். மேலும், பல்தரப்பு ஒத்துழைப்பு, தகவல் அடிப்படையிலான கொள்கை வடிவமைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து காசாகிராண்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் டாரதி தாமஸ் கூறுகையில், மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்கும் உலகளாவிய சவால்களுக்கும் தயார்படுத்தும் நோக்கத்துடன் CMUN மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தன்னம்பிக்கை மிக்க பேச்சாளர்கள், பொறுப்பான தலைவர்கள் மற்றும் உலகளாவிய விழிப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்குவதில் இதுபோன்ற நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ‘க்விஸ் மாஸ்டர் ஏபி’ என அறியப்படும் அபிஷேக் பரத்குமார் கலந்து கொண்டார். மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு அறிவுத்திறன் சார்ந்த கேள்விகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நிகழ்ச்சியை உற்சாகமாக நடத்தினார்.
மாணவர்களின் விமர்சனச் சிந்தனை, தகவல் தொடர்புத் திறன், தலைமைத்துவம், குழு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பார்வையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த CMUN 2026 மாநாடு, பங்கேற்ற மாணவர்களுக்கு பயனுள்ள கற்றல் அனுபவமாக அமைந்தது.

