தேசிய கார் பந்தயத்தில் இஷான் மாதேஷ், சாய்ஷிவா சங்கரன் அசத்தல்
சென்னை: சென்னையை அடுத்த மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் 4W–2026 தொடரின் 2-வது சுற்றில் பெங்களூருவைச் சேர்ந்த இஷான் மாதேஷ், எம்.ஆர்.எஃப் ஃபார்முலா 2000 பிரிவில் வெற்றி பெற்றார்.
சீசனின் முதல் சுற்றில் பங்கேற்காத இஷான் மாதேஷ், இந்த சுற்றின் முதல் இரண்டு பந்தயங்களில் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தார். 3-வது பந்தயத்தில் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை கைப்பற்றினார். இதன் மூலம் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த புனேவைச் சேர்ந்த இளம் வீரர் சாய்ஷிவா சங்கரனின் வெற்றி தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற இரண்டு பந்தயங்களில் சாய்ஷிவா சங்கரன் வெற்றி பெற்றிருந்தார். 3-வது பந்தயத்தில் இஷான் மாதேஷ் தொடக்கம் முதலே முன்னிலை பெற்று வெற்றியைத் தக்க வைத்தார்.
ஃபார்முலா 1600 பிரிவில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த புவன் போனு மூன்று பந்தயங்களில் இரண்டில் வெற்றி பெற்றார். மற்றொரு பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த கியான் எஸ் முதலிடம் பிடித்தார். அந்தப் பந்தயத்தில் புவன் போனு 2-வது இடத்தைப் பெற்றார்.
ஃபார்முலா எல்ஜிபி 1300 ஓபன் பிரிவில் டிடிஎஸ் ரேசிங் அணியின் விஸ்வாஸ் விஜயராஜ் ஆதிக்கம் செலுத்தினார். இந்த சுற்றில் நடைபெற்ற மூன்று பந்தயங்களிலும் நெல்லூரைச் சேர்ந்த அவர் வெற்றி பெற்றார். ஜூனியர் பிரிவில் 2-வது பந்தயத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஷத்வீர் ஷெட்டி வெற்றி பெற்றார். 3-வது பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த ஆதம் ஜுனைத், கவீன் தியன் ராஜபக்ச மற்றும் சௌரிகா லிவிந்து ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய சென்னையைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, எம்.ஆர்.எஃப் சலூன்ஸ் (டொயோட்டா எட்டியோஸ்) பிரிவில் சிறப்பாக செயல்பட்டு ஒரு வெற்றி உள்பட இரண்டு முறை முதல் மூன்று இடங்களுக்குள் வந்தார். எனினும், விதிமீறல் காரணமாக அவரது வெற்றி பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் ஆர் முதலிடத்திற்கு முன்னேறி தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தார். முதல் பந்தயத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ். கோகுல ரத்தினம் வெற்றி பெற்றார்.
ஃபோக்ஸ்வேகன் போலோ கோப்பை பிரிவில் மும்பையைச் சேர்ந்த பிரதீக் சோனவானே இரண்டு பந்தயங்களில் வெற்றி பெற்றார். மற்றொரு பந்தயத்தில் நொய்டாவைச் சேர்ந்த அமன் நாக்தேவ் முதலிடம் பிடித்தார்.
சூப்பர் ஸ்டாக் பிரிவில் திருச்சூரைச் சேர்ந்த தில்ஜித் டி.எஸ் மற்றும் டிடிஎஸ் ரேசிங் அணியின் சக வீரர் லால் கட்டிகுளம் பரதன் ஆகியோர் தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.

