தமிழ் செய்திகள்

25-வது முறை அரங்கேறும்’ நாச்சியார் நெக்ஸ்ட்’டாக்டர் அனிதா ரத்னத்தின் நாட்டிய-நாடகப் படைப்பு

விஷ்ணுவின் பக்தையும் தமிழ்ப் பெண் ஆழ்வாருமான ஆண்டாளின் வாழ்க்கை, அவரின் கவிதை மற்றும் காலத்தை வென்ற புகழைப் பறைசாற்றும் டாக்டர் அனிதா ரத்னத்தின் புகழ்பெற்ற நாட்டிய – நாடகப் படைப்பான ‘நாச்சியார் நெக்ஸ்ட்’-ன் (Naachiyar Next) 25-வது சிறப்பு கலைநிகழ்ச்சியை நர்த்தகி குளோபல் மீடியா பெருமிதத்துடன் வழங்குகிறது.

2003-ஆம் ஆண்டு முதன் முதல் அரங்கேற்றப்பட்ட டாக்டர் அனிதா ரத்னத்தின் ‘நாச்சியார்’ நாட்டிய – நாடகத்தின் படைப்பின் மேம்பட்ட புதிய பரிமாணமாக ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ உருவாகியுள்ளது. அனிதா ரத்னத்தின் பிரத்யேகப் பாணியில், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்நாட்டின் ஆன்மீகக் கவிஞரும், அவதரித்ததிலிருந்து சில நூற்றாண்டுகளிலேயே பெண் தெய்வமாகப் போற்றப்பட்டவருமான சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்ட ஆண்டாளின் தனித்துவமான பாசுரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பெண்களின் ஆசைகள்,அகவயமான பக்தி மற்றும் மரபுகளைத் தாண்டிய துணிச்சலான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஆண்டாளின் பாடல்களை, ஒரு பெண்ணியப் பார்வையில் இப்படைப்பு வெளிப்படுத்துகிறது.

டாக்டர் அனிதா ரத்னம் அவர்களால் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்படும் ‘நாச்சியார் நெக்ஸ்ட்’, முந்தைய நிகழ்ச்சிகளின் அனுபவத்தாலும் ஆண்டாளின் கதையோடு கொண்ட தொடர்ச்சியான பிணைப்பாலும் மேலும் மெருகேறியுள்ளது. தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பெண் புலவர்களில் ஒருவரான ஆண்டாளை ஆராயும் இப்படைப்பின் பயணத்தில், இந்த 25-வது அரங்கேற்றம் ஒரு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

டாக்டர் அனிதா ரத்னம் குறித்து:

டாக்டர் அனிதா ரத்னம், இந்தியாவின் புகழ்பெற்ற சமகால நடனக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், கலை படைப்பாளி, கலாச்சார செயற்பாட்டாளர் மற்றும் கலைத் தொழில்முனைவோர் என பல்வேறு பரிமாணங்களில் புகழ்பெற்றிருக்கிறார். பாரம்பரிய மற்றும் சமகால நடன வடிவங்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான பாணி இவருடையது. இந்திய நடனத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்துடன் போற்றப்படுகின்றன. இந்தியாவின் நிகழ்த்து கலைகள் மற்றும் காட்சி கலைகளை ஆராயவும்,மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் ‘அரங்கம் ட்ரஸ்ட்’ என்ற கலாச்சார அறக்கட்டளையை நிறுவிய இவர், நர்த்தகி.காம் (Narthaki.com) என்ற பெயரில் நாட்டியத்திற்கான இணையதளத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். ‘கைசிகி நாடகம்’ என்ற பழமையான சடங்குசார்ந்த நாடக வடிவத்தை மீட்டெடுத்து அதற்கு புத்துயிர் கொடுத்து அதன் தொடர் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளார். 2018-ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல விருதுகளையும் கௌரவங்களையும் தனது கலைப்பணிகளுக்காக அவர் பெற்றுள்ளார்.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகளில் முக்கிய இடம்பிடித்திருக்கும் ஆண்டாள் நாச்சியாரின் கவிதைகள் மற்றும் பக்திசார்ந்த கற்பனாத்திறன்களின் வழியாக ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ தனது இந்த கலைப் பயணத்தைத் தொடர்கிறது.

தேதி: அக்டோபர் 3, 2026

நேரம்: மாலை 6:00 மணி

இடம்: ருக்மிணி அரங்கம், கலாஷேத்ரா, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *