தமிழ் செய்திகள்

700 கிலோ பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்து 7,000 மீட்டர் துணிப் பின்னல்: எஸ்ஆர்எம் மாணவர்கள் உலக சாதனை முயற்சி

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 7,000 மீட்டர் நீளமுள்ள துணிப் பின்னலை உருவாக்கி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

குப்பைக் கிடங்குகளில் வீசப்பட்ட சுமார் 700 கிலோ பழைய ஆடைகளைப் பயன்படுத்தி இந்தத் துணிப் பின்னல் உருவாக்கப்பட்டது. மறுசுழற்சி மூலம் துணிக் கழிவுகளைப் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எஸ்ஆர்எம் ஃபேஷன் டிசைனிங் துறை, லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் வணிகக் கல்விப் புலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். உருவாக்கப்பட்ட துணிப் பின்னல், சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் ‘கூன்ஞ்’ (Goonj) தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பயன்படுத்தி பைகள், பாய்கள் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனை முயற்சி, யூத் யுனைடெட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் உலக யூத் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இயக்குநர் லோட்டி ஹில், அக்கவுன்சிலின் தேசிய பொதுச் செயலாளர் ஆர். விமல், கூன்ஞ் அமைப்பின் பிரதிநிதி அனிஷா, வழக்கறிஞர் மிருதுளா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

துணிக் கழிவுகளைக் குறைத்தல், பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்துதல், பொறுப்பான நுகர்வுப் பழக்கங்களை ஊக்குவித்தல் ஆகியவை இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாகும். மேலும், ஆடை வடிவமைப்புத் துறையில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் நிகழ்வு அமைந்தது.

இதுகுறித்து எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார் கூறுகையில், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு முயற்சி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்க முடியும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார். பழைய துணிகளைப் பயனுள்ள பொருட்களாக மாற்றுவதன் மூலம், இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கங்களைப் பின்பற்றவும் சமூகப் பொறுப்புடன் செயல்படவும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த முன்னெடுப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளான நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, காலநிலை நடவடிக்கை, கூட்டாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *