சென்னையில் ‘டோயிங்’ அறிமுகம்: மலிவு விலை உணவு விநியோகத்தில் புதிய மாற்றம்
சென்னை, ஏப்ரல் 14: மலிவு விலையில் உணவு விநியோக சேவையை வழங்கும் ‘Toing’ (டோயிங்) செயலி, இன்று சென்னையில் தனது சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த செயலி, தற்போது இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 7 மாதங்களில், டோயிங் தனது சேவையை புனே, ஆக்ரா, வடோதரா, குவஹாத்தி, நாசிக், நாக்பூர், பாட்னா, அவுரங்காபாத், போபால், டெல்லி, மீரட், குருகிராம், நோய்டா, ஃபரிதாபாத், காஜியாபாத், சண்டிகர், அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
டோயிங் செயலியின் முக்கிய சிறப்பம்சமாக, உணவு மற்றும் பானங்களுக்கு “மிகக் குறைந்த விலை உத்தரவாதம்” வழங்கப்படுவதாகும். உணவகங்களில் வழங்கப்படும் விலைக்கு சமமாகவோ அல்லது அதைவிடக் குறைவாகவோ விலை இருக்கும் என நிறுவனம் உறுதி அளிக்கிறது. மேலும், இந்த செயலியில் செய்யப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் பேக்கேஜிங் கட்டணம் மற்றும் பிளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஏற்கனவே பல பிரபலமான உணவகங்கள் டோயிங் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஏ2பி (Adyar Ananda Bhavan), ஜைட்டூன், சாம்கோ, ஹோட்டல் கிரஸண்ட், திண்டுக்கல் தலப்பாக்கட்டி, பர்கர் கிங், வாவ் மோமோ, தியோப்ரோமா, சப்வே, ஷெரீஃப் பாய் பிரியாணி, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி, நந்தனா பேலஸ், காலிஃபோர்னியா புரீட்டோ, அஞ்சப்பர், தி ரெட் பாக்ஸ், எஃப்.பி கேக்ஸ், பராட்டா என்வி மற்றும் மில்லெட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை அடங்கும்.
தென்னிந்திய, வடஇந்திய, சீன, இனிப்பு மற்றும் துரித உணவு வகைகள் என பல்வேறு உணவு வகைகள் இந்த செயலியில் கிடைக்கின்றன.
மலிவு விலை மற்றும் எளிதான அணுகுமுறை காரணமாக, டோயிங் செயலி குறிப்பாக ஜென்-இசட் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, புதிய நகரங்களுக்கு விரிவாக்கமும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த விரிவாக்கம் குறித்து டோயிங் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சித்தார்த் பாக்கூ கூறுகையில், “வாடிக்கையாளர்களின் உணவு விநியோக அனுபவத்தில் டோயிங் ஒரு புதிய தரத்தை உருவாக்குகிறது. மதிப்பை முன்னிறுத்தும் இளம் தலைமுறையை குறிவைத்து செயல்படுகிறோம். சென்னையில் சேவையை தொடங்குவது, எங்கள் வளர்ச்சி பயணத்தில் முக்கிய கட்டமாகும்,” என்றார்.
டோயிங் செயலி, வெளியீட்டிற்கு பின் 6 மாதங்களிலேயே 4 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்று, 4.5 மதிப்பீட்டை நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் உணவு விநியோக சந்தையில் மலிவு விலை மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

