சென்னையில் அரிய மூளை லிம்போமா நோயாளிக்கு CAR-T Cell சிகிச்சை வெற்றி
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவருக்கு ஏற்பட்டிருந்த அரிய வகை Primary Central Nervous System Lymphoma (PCNSL) எனப்படும் மூளை லிம்போமா புற்றுநோய்க்கு மேம்பட்ட CAR-T Cell Therapy சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் கிடைத்துள்ளதாக கிளினிகல்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நோயாளிக்கு தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்றல், நடப்பதில் சிரமம் மற்றும் இடது கை, கால்களில் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தன. மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகளில், மூளையை பாதிக்கும் அரிய மற்றும் தீவிரமான லிம்போமா வகையான Primary Central Nervous System Lymphoma (PCNSL) இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட சிகிச்சையாக அதிக அளவு கீமோதெரபி (High-dose Chemotherapy) அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு சுற்று சிகிச்சைக்குப் பின்னரும் நோய் முன்னேறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் கதிர்வீச்சு சிகிச்சையுடன் (Radiotherapy) கீமோதெரபி மற்றும் இடைக்காலமாக வாய்வழி குறிவைத்த (Targeted) சிகிச்சையும் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வராததால், மருத்துவக் குழு நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி, இந்தியாவில் உருவாக்கப்பட்ட NexCAR19 (Talicabtagene Autoleucel) CAR-T Cell Therapy சிகிச்சையை வழங்க முடிவு செய்தது.
இதற்காக, நோயாளியின் நோய் எதிர்ப்பு செல்கள் Leukapheresis என்ற சிறப்பு முறையின் மூலம் சேகரிக்கப்பட்டு, புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு தாக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு, பின்னர் CAR-T Cell Therapy ஆக மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு Cytokine Release Syndrome (CRS) எனப்படும் தீவிர அழற்சி எதிர்வினை, Immune Effector Cell-Associated Hemophagocytic Syndrome (IEC-HS) எனப்படும் அரிதான ஆனால் உயிருக்கு ஆபத்தான சிக்கல், கடுமையான தொற்றுகள் மற்றும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைதல் உள்ளிட்ட சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் மருத்துவ புற்றுநோய், இரத்தவியல், தொற்றுநோய், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் CAR-T சிறப்பு செவிலியர் குழுவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இணைந்து நோயாளியின் நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனர். சுமார் ஒரு மாத கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
CAR-T Cell Therapy சிகிச்சை பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட PET-CT பரிசோதனையில், உடலில் செயலில் இருக்கும் புற்றுநோய் அறிகுறிகள் எதுவும் இல்லாத Complete Metabolic Response பதிவானது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்த நிலையில், நோயாளியின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன், புதிய CAR-T தொடர்பான சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவப் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அருண் ரமணன் வி. கூறுகையில், Primary Central Nervous System Lymphoma என்பது அரிதான மற்றும் தீவிரமான புற்றுநோய் என்றும், வழக்கமான கீமோதெரபிக்கு பதிலளிக்காத நோயாளிகளுக்கு CAR-T Cell Therapy முக்கியமான சிகிச்சை முன்னேற்றமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த நோயாளியின் சிகிச்சை வெற்றி, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடு, மேம்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் எஸ். நிரஞ்சனி கூறுகையில், CAR-T Cell Therapy போன்ற மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கு சிறப்பு உள்கட்டமைப்பு, மருத்துவ நிபுணத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த நோயாளர் பராமரிப்பு அவசியம் என்றும், தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னை மற்றும் ஹைதராபாத் கிளஸ்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஒய். பாரத் காந்த் ரெட்டி கூறுகையில், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒத்துழைப்புடன் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளை நோயாளிகளுக்கு அணுகக்கூடிய வகையில் வழங்குவதன் மூலம் சிக்கலான புற்றுநோய்களுக்கும் சிறந்த சிகிச்சை முடிவுகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

