தமிழ் செய்திகள்

எல்.பி.ஜி-யிலிருந்து பி.என்.ஜி-க்கு மாறிய 7 அடுக்குமாடி குடியிருப்புகள் “LPG Free Zone” என அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், திங்க் கேஸ் (Think Gas) நிறுவனம் “LPG Free Zone” அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து மே 8 தேதியன்று தொடங்கப்பட்டது.

இந்த முயற்சியின் கீழ், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள 7 பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் “LPG Free Zone” ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் LPG சிலிண்டர் பயன்பாட்டிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பிற்கு மாறியுள்ளன. இந்த மாற்றத்தை முன்னிறுத்தி, அந்த குடியிருப்புகளுக்கு திங்க் கேஸ் நிறுவனம் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.

OMR சாலையில் அமைந்துள்ள SBIOA, Victoria Tower, Embassy Residency, Bollineni Phase 1 / 2 / 3, மற்றும் Urban Rise Revolution 1 ஆகிய குடியிருப்புகள் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளன. குறிப்பாக Urban Rise Revolution 1 குடியிருப்பில் பெரும்பாலான வீடுகள் PNG பயன்பாட்டிற்கு மாறியுள்ளதை முன்னிட்டு, அங்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த முயற்சி, குடியிருப்புகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான மற்றும் தடையற்ற குழாய் வழி எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றுவதோடு, நீண்டகால செலவு சிக்கனமும் வழங்கும் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும், நகர்ப்புறங்களில் எரிவாயு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், அனைவருக்கும் எளிதாக எரிவாயு கிடைப்பதை அதிகரிப்பதற்கும் இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து திங்க் கேஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டலத் தலைவர் திருக்குமரன் கூறுகையில், “LPG Free Zone அறிவிப்பின் மூலம் PNG பயன்பாட்டை விரைவுபடுத்தி, மேலும் பல குடும்பங்களை இந்த வசதிக்கு மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்றார்.

இதேபோல், PNGRB துணை இயக்குநர் அசுதோஷ் பட், “இத்தகைய முயற்சிகள் மக்களின் பங்களிப்பை அதிகரித்து, நகர எரிவாயு கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன” என்று தெரிவித்தார்.

வரும் மாதங்களில் இந்த திட்டத்தை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திங்க் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக அளவில் இயற்கை எரிவாயு இணைப்பை பெறும் குடியிருப்புகளுக்கு “LPG Free Zone” சான்றிதழ் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *