தமிழ் செய்திகள்

வானிலை கணிப்பில் புதிய முன்னேற்றம்: SRM ராமாபுரத்தில் ‘மிஷன் மௌசம்’ ஆய்வகம் நிறுவல்

சென்னை: சென்னையின் நகர்ப்புற வானிலை கண்காணிப்பு திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ராமாபுரம் வளாகத்தில் “சென்னையின் முதல் நகர்ப்புற வானிலை ஆய்வகம்” நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் முன்னெடுக்கும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன ஆய்வகம், ஐ.ஐ.டி.எம் புனே உருவாக்கப்பட்டதாகும். நகர்ப்புறங்களில் ஏற்படும் திடீர் வானிலை மாற்றங்களை துல்லியமாகக் கணித்து, உடனடி முன்னெச்சரிக்கைகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

சென்னை மண்டலத்தில் இதுவே முதன்மையான இத்தகைய வசதி ஆகும். காற்றில் உள்ள நுண்துகள்கள், மேக அமைப்பு, மழைப்பொழிவு, வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற முக்கிய வளிமண்டல அளவுகோல்களை தொடர்ந்து கண்காணித்து, பருவமழை முன்னறிவிப்புகளை மேலும் துல்லியமாக வழங்க உதவுகிறது. இதன் மூலம் விவசாயம், நீர்வளம், விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகளில் பேரிடர் முன்னெச்சரிக்கை சேவைகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வகத்தை புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வில் ஐ.ஐ.டி.எம் இயக்குநர் சூர்யா சந்திரா ராவ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் சிவகுமார், ஐ.ஐ.டி.எம் திட்ட இயக்குநர் தாரா பிரபாகரன் மற்றும் டீன் சக்தி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் புதிய வளிமண்டல அறிவியல் ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டது. மேலும், வானிலை ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி.எம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் டாக்டர் சிவக்குமார் தெரிவித்ததாவது:
“இந்த தேசியத் திட்டத்திற்காக எங்கள் ராமாபுரம் வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறோம். சென்னையின் வானிலை மற்றும் காற்றுத் தரத்தை ஆய்வு செய்ய இது ஒரு சிறந்த இடமாகும். இந்த வசதி கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்,” என்றார்.

மேலும், டீன் டாக்டர் சக்தி கணேஷ் கூறுகையில்:
“நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தீவிர வானிலைச் சவால்களை AI மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களின் மூலம் சமாளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த ஆய்வகம், சென்னைக்கு துல்லியமான தரவுகளை வழங்குவதோடு, மாணவர்களின் மேம்பட்ட ஆராய்ச்சிகளுக்கும் முக்கிய வாய்ப்பாக அமையும்,” என தெரிவித்தார்.

‘மிஷன் மௌசம்’ திட்டம், இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *