தமிழ் செய்திகள்

போலார் பேர் நிறுவனத்தின் 200-வது கிளை தொடக்கம்: பெங்களூரில் 100 கிளைகள் அமைத்து புதிய சாதனை

பெங்களூரு: ‘தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்’ என அழைக்கப்படும் போலார் பேர் நிறுவனம், இந்திய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், நிறுவனம் தொடங்கிய பெங்களூருவிலேயே 100-வது கிளையைத் திறந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரு ஐ.டி.பி.எல். அருகே தனது முதல் கிளையைத் தொடங்கிய போலார் பேர், தற்போது 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. முழுமையாக இந்தியர்களின் சுய முதலீட்டில் இயங்கி வரும் இந்நிறுவனம், உள்நாட்டு டெசர்ட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தொழில்முனைவோர் கிஷோர் ராய் தொடங்கிய போலார் பேர் நிறுவனம், ஆரம்பம் முதலே வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் சுயநிதி அடிப்படையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம் அளித்து, வலுவான பிராஞ்சைசி நெட்வொர்க் மூலம் நிறுவனம் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது.

200 கிளைகளாக விரிவடைந்த பயணம்

பெங்களூருவில் சிறிய அளவில் தொடங்கிய போலார் பேர் நிறுவனம், தற்போது கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கிளைகளை அமைத்துள்ளது.

ஐஸ்கிரீம் சண்டேக்கள், ஷேக்குகள், சர்பெட்கள் மற்றும் ஐஸ்கிரீம் கேக்குகள் உள்ளிட்ட பல்வேறு டெசர்ட் வகைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடும் வகையில் அதன் கடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் கிஷோர் ராய் கூறுகையில், “ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மறக்க முடியாத ஐஸ்கிரீம் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2008-ல் போலார் பேர் தொடங்கப்பட்டது. அப்போது ஐஸ்கிரீம் கப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், சண்டே வகை ஐஸ்கிரீம்களுக்கு இருந்த வாய்ப்பை உணர்ந்து தரமான பால் பொருட்கள் மற்றும் பிரத்யேக ரெசிபிகளுடன் சண்டேக்களை அறிமுகப்படுத்தினோம்.

பெங்களூரில் மட்டும் 100 கடைகளைத் திறந்திருப்பது எங்களது பயணத்தில் முக்கியமான சாதனை. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி,” என்றார்.

தரத்திற்கு முக்கியத்துவம்

நிறுவனத்தின் வணிகம் மற்றும் செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் பிரகாஷ் கூறுகையில், “நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தரத்திற்கு முதலிடம் அளிக்கிறோம். உயர்தரப் பொருட்களைத் தேர்வு செய்வது முதல் அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான தரத்தைப் பராமரிப்பது வரை கவனம் செலுத்துகிறோம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய சுவைகள், பல்வேறு அளவுகள் மற்றும் காம்போக்களை வழங்கி வருகிறோம். 200-வது கிளை என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையிலும் தரம், புதுமை மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றை தொடர்ந்து இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்,” என்றார்.

பிராஞ்சைசி முறையில் விரிவாக்கம்

இந்தியாவில் ஐஸ்கிரீம் மற்றும் டெசர்ட் சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பு அவ்வப்போது மட்டுமே ஐஸ்கிரீம் சாப்பிட்ட நிலை மாறி, தற்போது குடும்பத்துடன் இரவு உணவுக்குப் பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற பழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்கு ஏற்ப புதிய வகை சண்டேக்கள் மற்றும் அமர்ந்து சாப்பிடுவதற்கான வசதிகளுடன் கடைகளை நிறுவனம் அமைத்து வருகிறது.

போலார் பேரின் விரிவாக்கத்தில் பிராஞ்சைசி முறை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த கடைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு கடைகள் நீண்டகால பிராஞ்சைசி கூட்டாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 200 கிளைகளை எட்டியுள்ள போலார் பேர் நிறுவனம், ஏற்கனவே உள்ள சந்தைகளில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் பல்வேறு புதிய நகரங்களுக்கும் கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *