சென்னையில் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் புதிய சொகுசு கார் விற்பனை மற்றும் சேவை மையங்கள் திறப்பு
சென்னை: ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனம், குன் ஆட்டோ வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தனது முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவீன விற்பனைக் காட்சியகமும், தனி வாகனப் பராமரிப்பு மற்றும் உதிரிபாகச் சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, சதர்ன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள புதிய விற்பனைக் காட்சியகத்தில், ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர், டிஸ்கவரி ஆகிய சொகுசு கார் பிராண்டுகளின் பல்வேறு மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பிராண்டுகளின் பெயரிலான பொருட்களும் நினைவுப் பரிசுகளும் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன.
அம்பத்தூர் மன்னூர்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட சேவை மையத்தில், நவீன பணிமனை வசதிகளுடன் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வாகனப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் உதிரிபாகங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஜேஎல்ஆர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜன் அம்பா கூறுகையில், இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளில் விற்பனை மையங்களை விரிவுபடுத்துவது நிறுவனத்தின் வளர்ச்சி உத்தியின் ஒரு பகுதியாகும். சொகுசு வாகனச் சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் சென்னையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குன் ஆட்டோ வொர்க்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்க முடியும் என்றார்.
குன் ஆட்டோ வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண்குமார் உப்புசுவாமி கூறுகையில், சென்னையில் ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர், டிஸ்கவரி ஆகிய பிராண்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையத்தை அமைப்பதில் ஜேஎல்ஆர் இந்தியாவுடன் இணைந்திருப்பது பெருமையளிக்கிறது. புதிய விற்பனைக் காட்சியகமும் சேவை மையமும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் உலகத்தரம் வாய்ந்த வாகனப் பராமரிப்பு வசதிகளையும் வழங்கும் என்றார்.
ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனம் தனது விற்பனை மற்றும் சேவை மையக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய மையங்கள் தமிழகத்தில் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், சொகுசு கார் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

