தமிழ் செய்திகள்

கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு ₹24 கோடி மானியம்: HCL ஃபவுண்டேஷன் அறிவிப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCLTech-ன் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்களை செயல்படுத்தும் HCL ஃபவுண்டேஷன், HCLTech Grant-ன் 12வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

இந்த மானியத் திட்டத்தின் மூலம், கிராமப்புற இந்தியாவில் நிலையான சமூக மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படும் இலாப நோக்கற்ற அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGOs) மொத்தம் ₹24 கோடி நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

நீர் மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய நான்கு முக்கிய துறைகளில் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறன் கொண்ட திட்டங்கள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகும் ஒரு நிறுவனம் தலா ₹5 கோடி மானியத்தைப் பெறும். மேலும், எட்டு நிறுவனங்களுக்கு தலா ₹50 லட்சம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 30, 2026-க்குள் HCL ஃபவுண்டேஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் குறித்து HCL ஃபவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் நிதி பண்டிர் கூறுகையில், “சமூகங்களின் அடிப்படை தேவைகளை நன்கு புரிந்துள்ள உள்ளூர் அரசு சாரா அமைப்புகளிடமிருந்தே உண்மையான மாற்றங்கள் உருவாகின்றன. HCLTech Grant மூலம் புதுமையான திட்டங்களை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

HCLTech Grant ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் இதுவரை இந்தியா முழுவதும் 61,000 கிராமங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக HCL ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதுடன், 68,300 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 67,000 டன்களுக்கும் அதிகமான கரியமில வாயு (CO₂) வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை HCL ஃபவுண்டேஷன், HCLTech Grant திட்டத்தின் வாயிலாக ₹203 கோடிக்கும் அதிகமான நிதி உதவியை வழங்க உறுதியளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 11வது பதிப்பில், ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதிகளில் நீர் சேமிப்பு, ஜார்கண்டில் பல்லுயிர் பாதுகாப்பு, மிசோரமில் சுகாதார சேவைகள் மேம்பாடு மற்றும் ராஜஸ்தானில் கல்வி வாயிலாக பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களுக்காக நான்கு அரசு சாரா நிறுவனங்கள் தலா ₹5 கோடி மானியத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தன.

மேலும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) மற்றும் தேச வளர்ச்சி தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கும் வகையில், HCL ஃபவுண்டேஷன் சார்பில் “HCLTech Grant Edition XII All India Consultations 2026” என்ற கருத்தரங்கத் தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கருத்தரங்குகள் புவனேஸ்வர், சென்னை, நாக்பூர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *