கேளம்பாக்கத்தில் கழிவு நீர் கால்வாய்க்கு பள்ளம் தோண்டும்போது இயற்கை எரிவாயு குழாயில் ஏற்பட்ட சேதம் உடனடியாக சீரமைப்பு
சென்னை: ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி எரிவாயுவிற்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது.
எரிவாயுவினை நேரடியாக இல்லங்களுக்கே கொண்டு செல்வதற்கு ஏதுவாக பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆங்காங்கே குழாய்கள் செல்வது குறித்த எச்சரிக்கை பலகைகளை இந்நிறுவனம் வைத்துள்ள போதிலும், கவனக்குறைவாக செயல்படும் நபர்களால் இதன் எரிவாயு குழாயில் சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கேளம்பாக்கத்தில் கிராம பஞ்சாயத்து சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் 63மி.மீ. விட்டம் கொண்ட இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏஜி&பி நிறுவனத்தின் அவசர சேவை எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்து வந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதனை அரை மணி நேரத்தில் சீர்செய்து அப்பகுதிக்கான எரிவாயு வினியோகத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்களின் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டும்போது தங்களை தொடர்பு கொள்ளுமாறு ஏஜி&பி பிரதம் நிறுவனம் எச்சரிக்கை பலகைகள் வைத்தும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் அது குறித்து கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பணிகளின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இதுபோன்ற அலட்சியங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், மூன்றாம் தரப்பினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் இச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.