தமிழ் செய்திகள்

ராணிப்பேட்டையில் எரிவாயுக் குழாய் சேதம்: ‘தோண்டுவதற்கு முன் அழைப்பீர்’ நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் பொன்னம்பட்டு பிள்ளையார் கோவில் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டியபோது, THINK Gas நிறுவனத்தின் நகர எரிவாயுக் குழாய் சேதமடைந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைக் குழுவினர் சேதமடைந்த குழாய்ப் பகுதியைத் தனிமைப்படுத்தி, எரிவாயு விநியோகத்தை விரைவாகச் சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதாகவும், குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீடுகளுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் வாகனங்களுக்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்திற்காக THINK Gas நிறுவனம் குழாய் கட்டமைப்பை அமைத்துள்ளது. எரிவாயுக் குழாய்கள் செல்லும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள், அடையாளக் கற்கள் மற்றும் அவசரகாலத் தொடர்பு எண்கள் வைக்கப்பட்டிருந்தும், பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முன்கூட்டியே நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகப் பொறுப்பானவர்கள் மீது அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளதாக THINK Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நகர எரிவாயு விநியோக நிறுவனத்திடமோ அல்லது நகராட்சி அதிகாரிகளிடமோ தகவல் தெரிவிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

எரிவாயுக் குழாய்கள் சேதமடைவதைத் தவிர்க்க, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு THINK Gas நிறுவனத்தின் கட்டணமில்லா உதவி எண்ணான 1800 2022 999-ஐத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *