தமிழ் செய்திகள்

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு பகுதியில் 500 கி.மீ. இயற்கை எரிவாயு குழாய் பணியை நிறைவு செய்த திங்க் கியாஸ்

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 550 கி.மீ. விரிவாக்கம்; 20,000 வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு

காஞ்சிபுரம்: இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு விநியோக நிறுவனங்களில் ஒன்றான திங்க் கியாஸ், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தூய்மையான மற்றும் நம்பகமான எரிபொருளை வழங்கும் நோக்கில், ஸ்டீல் மற்றும் எம்.டி.பி.இ. (MDPE) குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 10,125-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 550 கிலோமீட்டருக்கும் அதிகமான குழாய் வலையமைப்பை உருவாக்கி, PNG இணைப்புகள் பெறும் வீடுகளின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

திங்க் கியாஸ் நிறுவனம் தற்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 52 சிஎன்ஜி (CNG) நிலையங்களை இயக்கி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 70 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு முதல் இப்பகுதிகளில் சேவையாற்றி வரும் திங்க் கியாஸ், எரிவாயு விநியோக உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. குழாய் வலையமைப்பு, சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் வாடிக்கையாளர் இணைப்புகளில் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டு தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

அரசின் தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திங்க் கியாஸ், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்து வருகிறது.

தற்போது ஸ்ரீபெரும்புதூர், வல்லம், கேளம்பாக்கம், படூர், நாவலூர், தாழம்பூர், தையூர், ஏகாட்டூர், திருப்போரூர், பெரும்பாக்கம் மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் PNG சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர் மற்றும் மொளச்சூர் பகுதிகளில் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) மற்றும் மாநில அரசின் ஆதரவுடன், குறிப்பிட்ட பகுதியில் PNG வசதி முழுமையாக கிடைப்பதை உறுதி செய்த பின்னர் அந்த பகுதியை “LPG இல்லா மண்டலம்” என அறிவிக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த திட்டம் திங்க் கியாஸ் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டு எரிவாயு இணைப்பு பெற விரும்புவோர் திங்க் கியாஸ் இணையதளம், வாடிக்கையாளர் சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது கட்டணமில்லா உதவி எண் 1800 202 1999 மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *