General

சென்னை – ஸ்ரீலங்கா விமானம் ரத்து; பயணிகள் தவிப்பு

சென்னையில் இருந்து இன்று காலை இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் 186 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு.

ஆத்திரமடைந்த பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களை சூழ்ந்து கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சென்னையில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 186 பேர் இலங்கை செல்ல இருந்தனர்.

இந்த விமானம் வழக்கமாக இலங்கையில் இருந்து, காலை 8:40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, மீண்டும் இங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்லும்.

ஆனால் இந்த விமானம் இன்று இலங்கையில் இருந்து சென்னைக்கு வரவில்லை. இலங்கையில் மோசமான வானிலை நிலவுவதால், இலங்கையில் இருந்து சென்னை வர வேண்டிய பயணிகள் விமானமும் வரவில்லை, சென்னையில் இருந்து இலங்கை செல்ல ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று இலங்கை செல்லாது, விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமானத்தில் பயணிக்க வந்த 186 பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள், இலங்கை வழியாக சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லக்கூடிய பயணிகள். அவர்கள் கடும் அதிர்ச்சியில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் நிர்வாகம், அந்த டிரான்சிட் பயணிகளுக்கு மட்டும் ஏர் இந்தியா, உள்ளிட்ட வேறு விமானங்களில், டிக்கட்டுகளை மாற்றி அனுப்பினர்.

ஆனால் நேரடியாக இலங்கை மட்டும் செல்லக்கூடிய, 140 பயணிகளுக்கு, விமானம் இன்று ரத்து. இன்று இரவு அல்லது நாளை காலை செல்லும் விமானத்தில் நீங்கள் பயணிக்கலாம் என்று கூறி, பயணிகளை விமான நிலையத்திற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முயற்சித்தனர்.

இதை அடுத்து இலங்கை செல்ல இருந்த 140 பயணிகளும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மற்ற ஏர்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும், இலங்கைக்கு சேவைகளை இயக்கும்போது, உங்களுக்கு மட்டும் எப்படி வானிலை மோசம்? என்று கேட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாகவே இதை போல் தான், தொடர்ந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், அடிக்கடி ரத்தாகிறது என்று, பயணிகள் போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, பயணிகளை சமாதானம் செய்தனர். ஆனால் பயணிகள் நாங்கள் இப்போது இலங்கைக்கு சொல்ல வேண்டும். இதற்கு வழி சொல்லுங்கள் என்று ஆத்திரத்துடன் கேட்டனர். ஆனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தரப்பில் சரியான பதில் எதுவும் கூறவில்லை.

இதை அடுத்து விமான நிலைய அதிகாரிகள், உங்கள் டிக்கெட்களை வேறு விமானத்திற்கு மாற்றி, உங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று அமைதிப்படுத்தினர்.

ஆனாலும் இலங்கை செல்ல வேண்டிய பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 140 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவர்களை வேறு விமான நிறுவனங்களின் விமானங்களில் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *