திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 35 லட்சம் ரூபாய் செலவில் வேலி அமைக்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம்
திருவண்ணாமலை: பாரம்பரிய மற்றும் கலாச்சார உடையான வேட்டி உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ராம்ராஜ் காட்டன், தனது நிறுவனம் சார்பாக, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலமலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் ரூ.35 லட்சம் செலவில் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
14 கிலோமீட்டர் நீளமுடைய ஆன்மிக வழித்தடமாகிய இந்தக் கிரிவைலப் பாதையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகச் சென்று வழிபடுகின்றனர். அண்மைக் காலங்களில் வனவிலங்குகள் இந்தப் பாதையை ஊடுருவும் சூழ்நிலை ஏற்பட்டதால், பக்தர்களின் பாதுகாப்பும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேலியானது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, விவசாய நிலங்களை விலங்குகளிடமிருந்து காக்கும் முக்கியப் பங்களிப்பாகவும் அமைந்துள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், “நாம் அனைவரும் திருத்தலங்களை பாதுகாப்பது என்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்த திட்டத்தின் மூலமாக ஆன்மிகம், விவசாயம் மற்றும் பருவநிலை சமநிலைக்குத் தேவயான பல்வேறு அம்சங்களை நாம் ஒருங்கிணைத்துள்ளோம். இந்த வேலி, பக்தர்களைப் பாதுகாப்பதோடு, விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்கவும், விலங்குகள் சுதந்திரமாக வாழவும் வழிவகுக்கும். இது தான் ராம்ராஜ் விரும்பும் ஒற்றுமையான வாழ்வு.”
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உதவிய, தேசிய இந்து கோயில் அறக்கட்டளை, அதன் தேசிய செயலாளர் சுரேஷ், மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது என்று கூறினார்.