வீட்டிலிருந்து பள்ளி தொலைவில் இருந்தாலும் ஆர்.டி.இ மூலம் சீட் கிடைக்கும்
ஆர்.டி.இ (RTE) எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்கலாம்.
மாணவர்களது கல்வி செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று விண்ணப்பிக்கும் மாணவரின் வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவரின் வீடு ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கும் பட்சத்தில் சில சந்தர்ப்பங்களில் மாணவரின் விண்ணப்பத்தை நிராகரிக்காமல் அவருக்கு பள்ளியில் சீட் கொடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது மகனை வால்பாறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.
பள்ளியில் இருந்து அவரது வீடு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளதால் அவரது விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் நிராகரித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் நிரப்ப வேண்டிய 25 சதவீத சேர்க்கையில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளதால், தனது மகனுக்கு சீட் தருமாறு லட்சுமணன் பள்ளி நிர்வாகித்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததின் காரணமாக பணம் கட்டி தனது மகனை எல்.கே.ஜி வகுப்பில் அதே பள்ளியில் சேர்த்துள்ளார்.
ஆர்.டி.இ மூலம் சீட் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார் , வழக்கு விசாரணையில், ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளியில் நிரப்ப வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளதால், தூரத்தை காரணமாக எடுத்துக்கொள்ளாமல் லட்சுமணனின் மகனுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் பள்ளியில் சேர்த்து கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், லட்சுமணன் செலுத்திய கல்வி கட்டணத்தையும் பள்ளி நிர்வாகம் உடனடியாக அவருக்கு திருப்பி வழங்க வேண்டுமெனவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.