தமிழ் செய்திகள்

சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் திட்டத்தில் தேசிய அளவில் சாதனை படைத்த சென்னை மாணவர்கள்

20 ஆயிரம் பங்கேற்பாளர்களில் இருந்து தேர்வு; செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் திட்டங்களுக்கு தேசிய அங்கீகாரம்

சென்னை, ஜூன் 5: சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் 2025 திட்டத்தின் கீழ் தேசிய அளவில் சிறந்த செயல்திறன் கொண்ட மாணவர்களாக சென்னை சேர்ந்த இரு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), கோடிங் மற்றும் பிக் டேட்டா உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தத் திட்டத்தில், சென்னை குயின் மேரிஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. மாணவி கே. சிவானி மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி. மாணவர் எஸ். சந்தோஷ் குமார் ஆகியோர் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட நான்கு சிறந்த மாணவர்களில் இடம்பிடித்துள்ளனர்.

பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைத்து போக்குவரத்தை சீரமைக்க உதவும் வகையில், இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘ஸ்மார்ட் டிராபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற திட்டத்தை சிவானி உருவாக்கியுள்ளார். நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து சவால்களை தொழில்நுட்பத்தின் மூலம் கையாளும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

அதேபோல், விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘பூச்சி கண்டறிதல் மற்றும் கட்டுப்பாட்டு மாதிரி’யை சந்தோஷ் குமார் உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டம் விவசாய உற்பத்தியை மேம்படுத்த உதவும் தொழில்நுட்பத் தீர்வாக கருதப்படுகிறது.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களை குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியா தலைமையகத்தில் சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜே.பி. பார்க் நேரில் சந்தித்து பாராட்டினார்.

மேலும், நொய்டா மற்றும் டெல்லியில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் டிசைன் மையத்தைப் பார்வையிடும் வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடிய அவர்கள், நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டனர்.

இந்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்த சிவானி, “அன்றாட வாழ்க்கையில் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முடியும் என்பதை இந்தத் திட்டம் எனக்கு உணர்த்தியது. சமூகத்திற்குப் பயனுள்ள திட்டங்களை உருவாக்கும் நம்பிக்கையையும் இது அளித்துள்ளது” என்றார்.

மேலும், “என் சொந்த ஊரை விட்டு தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. இன்று டெல்லியில் உள்ள சாம்சங் தலைமையகத்தில் நிற்பது எனக்கு பெருமையான தருணமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.

சந்தோஷ் குமார் கூறுகையில், “வகுப்பறைக் கற்றலைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நடைமுறையில் பயன்படுத்தும் அனுபவத்தை இந்தத் திட்டம் வழங்கியது. பூச்சி கண்டறிதல் திட்டத்தில் பணியாற்றியதன் மூலம் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிந்துகொண்டேன்” என்றார்.

சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் திட்டம், இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி, செயல்முறை கற்றல் மற்றும் தொழில்துறை சார்ந்த அனுபவங்களை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 30 மாணவர்களை சாம்சங் இந்தியா பாராட்டியுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு, கோடிங் மற்றும் ப்ரோக்ராமிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் பிக் டேட்டா ஆகிய நான்கு பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *