டி. ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா
சென்னை: டி. ராஜேந்தர் இசையமைக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா முதல் முறையாக பாடியுள்ளார். கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) சார்பில் இந்துமதி கோபி தயாரித்து, ஆர். கோபி வழங்கும் இப்படத்தை ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.

டி. ராஜேந்தர் இசையில் இளையராஜா
பன்முக திறமை கொண்ட டி. ராஜேந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசையில், இசைஞானி இளையராஜா முதல் முறையாக பாடியிருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மேலும், டி. ராஜேந்தரும் கே. பாக்யராஜும் இணைந்து பணியாற்றிய ஒரே திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜின் கடைசி திரைப்படம்
சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாக ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. இப்படத்தில் நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வரும் முக்கிய வேடத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார்.
அதேபோல், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த திரைப்படம் என்ற சிறப்பும் இப்படத்திற்கு உள்ளது. இதில் இருவரும் கணவன்–மனைவியாகவே நடித்துள்ளனர்.
புதுமுகங்கள் மற்றும் பல நட்சத்திரங்கள்
‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக், இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
தெலுங்கில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த் ஐயங்கார் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வேதா என்ற நடிகையும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
ஓசூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை
தமிழ்நாடு–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார்.
படத்திற்கு ‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளுக்கு பவர் பாண்டியன் பயிற்சி அளித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

