தமிழ் செய்திகள்

50,000 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் திருக்குறள் திருவிழா

சென்னை: ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் நடைபெற்ற மாபெரும் “திருக்குறள் திருவிழா”-வில் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து 50,000 மாணவர்கள் பங்கேற்று 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்தனர்.

சென்னை தாம்பரம் மேற்கு பகுதியில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் நேரடியாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஶ்ரீ சைதன்யா பள்ளிகளைச் சேர்ந்த 40,000 மாணவர்கள் இணைய வழியாகவும் பங்கேற்றனர்.

விழாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருக்குறள் தற்கால மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டியாக அமைகிறது என்பது குறித்து அவர் சிறப்புரையாற்றினார்.

திருவள்ளுவரின் 1,330 குறள்களில் இடம்பெற்றுள்ள ஆழமான கருத்துகளையும், அவற்றின் பொருளையும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வைரமுத்து வலியுறுத்தினார். மேலும், மாபெரும் திருக்குறள் திருவிழாவை ஏற்பாடு செய்த ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஶ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குநர் சீமா போபண்ணா கலந்து கொண்டு பேசினார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் பண்பாடு, மொழிப்பற்று மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

பள்ளியின் தமிழ்நாடு செயல்பாட்டுத் தலைவர் ஹரிபாபுவும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தார்.

உலகச் சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலகச் சாதனைப் புத்தக அலுவலர்கள் அங்கிதா ஷா மற்றும் ரவி ஆகியோர் கலந்து கொண்டு உலகச் சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழை வழங்கினர்.

மேலும், சென்னை விமான நிலைய துணை மேலாளர் ஜி. விவேகானந்தனும் விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி நிர்வாக மேலாளர்கள், பள்ளி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *