தமிழ் செய்திகள்

ஸ்விக்கியின் ‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ சேவைக்கு வரவேற்பு: 2 ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி

சென்னை: ரயில் பயணிகளுக்கான ஸ்விக்கியின் ‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ உணவு விநியோக சேவை கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெருநகரங்களை விட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இச்சேவையின் பயன்பாடு இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 66 ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த ‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ சேவை, தற்போது 201 நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சேவை வழங்கப்படும் நிலையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு உணவு ஆர்டர் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில் ஸ்விக்கி இரண்டு புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘சர்ச் பை டிரெயின்’ (Search by Train) வசதி மூலம் பயணிகள் தங்களது ரயில் எண் அல்லது ரயில் பெயரை உள்ளிட்டு, தங்களது பயண வழித்தடத்துடன் தொடர்புடைய உணவகங்கள் மற்றும் மெனுக்களை நேரடியாகப் பார்வையிட முடியும்.

மேலும், ‘99 ஸ்டோர் விட்ஜெட்’ (99 Store Widget) என்ற புதிய வசதி மூலம் குறைந்த விலையில் கிடைக்கும் உணவு வகைகளை பயணிகள் எளிதாகத் தேடி ஆர்டர் செய்ய முடியும்.

ஆரோக்கியமான பானங்களுக்கு மாறும் பயணிகள்

ரயில் பயணிகளின் உணவு விருப்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் லஸ்ஸி ஆர்டர்கள் 60 சதவீதமும், மோர் ஆர்டர்கள் 40 சதவீதமும், மோஜிட்டோ ஆர்டர்கள் 90 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன.

பாரம்பரிய மற்றும் பிராந்திய உணவுகளுக்கும் பயணிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ரயில்களில் செய்யப்படும் மொத்த உணவு ஆர்டர்களில் 65 சதவீதத்துக்கும் அதிகமானவை தாலி உள்ளிட்ட முழுமையான உணவு வகைகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிப்பு வகைகளுக்கான ஆர்டர்களும் 110 சதவீதம் அதிகரித்துள்ளன. இதில் ரசகுல்லாவுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்விக்கி ஃபுட் மார்க்கெட்பிளேஸின் தலைமை வர்த்தக அதிகாரி சித்தார்த் பாக்கூ கூறுகையில், ஆன்லைன் உணவு விநியோகத்தின் பயன்பாடு விசேஷ நாட்களுக்கான சேவை என்ற நிலையிலிருந்து பல்வேறு அன்றாடத் தேவைகளுக்கும் விரிவடைந்து வருவதாக தெரிவித்தார்.

‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ சேவை மூலம் பயணிகள் தங்களது பயணத்திற்கு ஏற்றவாறு உணவை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், பயணிக்கும் வழித்தடங்களில் கிடைக்கும் பிராந்திய சிறப்பு உணவுகளையும் தேர்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய நிலையங்கள் இணைப்பு

ஸ்விக்கியின் ரயில் உணவு விநியோக வலையமைப்பில் கோலாப்பூர், வர்தா, ஷாஹ்தோல், காக்கிநாடா, பரத்பூர், சித்தூர், தஞ்சாவூர், ராய்கர், ஜாம்நகர், இந்தூர் மற்றும் துண்ட்லா உள்ளிட்ட புதிய நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ரயில் பயணத்தை பிராந்திய உணவுச் சுற்றுப்பயணம் போன்று பயணிகள் பயன்படுத்தி வருவதையும் நிறுவனத்தின் விற்பனைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜெய்ப்பூர் சந்திப்பில் பியாஸ் கச்சோரி அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக உள்ளது. போபாலில் காலை உணவு வகைகளில் போஹா முன்னிலை வகிக்கிறது.

தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரியாணி வகைகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. லக்னோவில் துண்டே கலௌட்டி கபாப் பிரபலமாக உள்ளது. நாக்பூரில் ஹல்திராமின் தாலிகளும், கோவாவின் மட்காவ்ன் பகுதியில் உள்ளூர் கடல் உணவு தாலிகளும் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் இடம்பெற்றுள்ளன.

2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ சேவை, பல்வேறு வயதுப் பிரிவினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக இளம் தலைமுறையினரிடையேயும் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *