மீடியா துறையினரை கவுரவிக்க விருது
பெங்களூரில் அக்டோபர் 23-ல் பிரமாண்ட விழா
சென்னை: மீடியா துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்கள், தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை கவுரவிக்கும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த தி நியூ இன்டியன் டைம்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழா, இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 23-ம் தேதி பெங்களூரு பேலஸ் மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளைச் சேர்ந்த மீடியா துறையினருக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தி நியூ இன்டியன் டைம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரகுபட், நடிகர் தலைவாசல் விஜய், ஏ.யூ. ஓடிடி நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழா குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரகுபட் கூறியதாவது:
“மீடியா துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொகுப்பாளர்கள், நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், வாய்ஸ்ஓவர் ஆர்ட்டிஸ்ட்கள், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு கடந்த 8 ஆண்டுகளாக விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறோம்.
தமிழகத்தில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பலர் பெங்களூருக்கு வந்து விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளைச் சேர்ந்த மீடியா துறையினருக்கு 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், இந்த ஆண்டு முதல் பிரிண்டிங் மீடியா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. பெங்களூரில் நடைபெறும் விழாவில் முன்னணி பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரபலங்களை பாராட்டுவதுடன், அவர்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மீடியா துறையினரையும் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விருது விழா நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த விழாவை வேறு மாநிலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழுக்கான விருது கமிட்டி நடுவராக மூத்த பத்திரிகையாளர் மீனாட்சிசுந்தரம் செயல்படுகிறார்” என்றார்.
மீடியாவை கவுரவிப்பது முக்கியம்: தலைவாசல் விஜய்
நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், “மீடியாவுக்கு விருது வழங்குவது, அவர்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை வெளியில் கொண்டு வருவது நல்ல விஷயம். இதன் மூலம் அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறேன். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். ‘யுகபுருஷன்’ என்ற மலையாள திரைப்படத்தில் நாராயணகுருவாக நடித்தேன். அந்த படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்தது. அந்த கதாபாத்திரத்துக்கான எனது தோற்றத்தை பார்த்து நடிகர் மம்முட்டி, அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் பாராட்டினர். இதுபோன்ற பாராட்டுகள் எனக்கு தொடர்ந்து உற்சாகம் அளிக்கின்றன.
தற்போது சினிமா மட்டுமின்றி ஓடிடியிலும் நடித்து வருகிறேன். ‘ரிசார்ட் நெடுமாறன்’ கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களும் வருகின்றன; தவறான விஷயங்களும் வருகின்றன. என் தந்தை மறைந்த சோகத்தில், அவரது அஸ்தியை கரைப்பதற்காக நின்றுகொண்டிருந்தபோது, இயக்குநர் பாக்யராஜ் மறைந்துவிட்டதாகவும், அது தொடர்பாக எங்களிடம் தொலைபேசியில் 5 நிமிடங்கள் பேசுமாறும் கேட்டனர். அந்த நேரத்தில் எனது நிலையை எப்படி புரிய வைப்பது? சில விஷயங்களை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது” என்றார்.
பிரிண்டிங் மீடியாவுக்கும் இந்த ஆண்டு விருது
மீடியா துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது விழா நடைபெற உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த மீடியா துறையினருக்கு விருதுகள் வழங்கப்படுவதுடன், இந்த ஆண்டு முதல் பிரிண்டிங் மீடியா துறையினருக்கும் விருதுகள் வழங்கப்படுவது விழாவின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
அக்டோபர் 23-ம் தேதி பெங்களூரு பேலஸ் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

