அப்ரோ மற்றும் தாஸ் & கோ நிறுவனத்தின் 16-ம் ஆண்டு விழா: 1,000 பேருக்கு அன்னதானம், கைம்பெண்களுக்கு உதவித்தொகை
சென்னை: அப்ரோ மற்றும் தாஸ் & கோ நிறுவனத்தின் 16-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஐ.பி. யேசுதாஸ் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா, சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள நிறுவன அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், பெண்களுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் நலிவடைந்த கைம்பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைம்பெண்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
விழாவையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் ஐ.பி. யேசுதாஸ், அப்ரோ மற்றும் தாஸ் & கோ நிறுவனத்தை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த கைம்பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவர்களை சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களாக உருவாக்கி, நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யேசுதாஸ் தெரிவித்தார்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொள்வதே நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவில் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

