இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தது வேட்டி தான்; பெங்களூரு சம்பவத்திற்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வருத்தம்
சென்னை 20 ஜூலை 2024: பெங்களூரு மால் ஒன்றில் வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சமபவத்திற்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள மால் ஒன்றில் 65 வயதான பக்கீரப்பா என்ற விவசாயி தனது மகனுடன் கல்கி படம் பார்க்க சென்றார். பக்கீரப்பா தலைப்பாகை மற்றும் வெட்டி அணிந்து மாலுக்கு சென்ற நிலையில், அங்கிருந்த காவலாளி அவரை மாலுக்குள் அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட மாலுக்கு ஒரு வாரத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக புகழ்பெற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவன தலைவர் நாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;
கடந்த வாரம் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஜவுளி கடைகளில் ராம்ராஜ் வேட்டிகள் அதிகளவில் விற்பனையாவதையும் , அங்கு வசிக்கும் மக்கள் தனக்கு கொடுத்த வரவேற்பையும் கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், அனால் பெங்களுருவில் நடந்திருக்கும் சம்பவம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வேட்டி என்பது நமது பாரம்பரிய உடை, ஒரே ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு ப்ரிட்டிஷ்க்காரர்களுடன் அகிம்சை முறையில் போரிட்டு நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்தவர் மகாத்மா காந்தி.
இப்படியொரு பெருமைக்கு சொந்தமான பாரம்பரிய வேட்டியை அணிவது நமக்கு அவமானம் அல்ல, அது இந்தியாவின் அடையாளம், கலாச்சாரம் என்பதை நாம் உணர வேண்டும்.
வேட்டி கட்டியதால் ஆரம்பகாலங்களில் எனக்கு நேர்ந்த அவமானங்களினால் தான் இந்த நிறுவனம் உண்டானது. எனக்கு கௌரவத்தையும், செல்வாக்கையும், புகழையும் பெற்றுத்தந்தது வேட்டி தான்.
நமது முன்னோர்கள் அணிந்த உடை, நமக்கு சுதந்திரம் பெற்று தந்த உடை, இதை அணிவதால் நமக்கு மரியாதை மேலும் கூடும்.
இந்த சம்பவத்தை ஒரு பாடமாக கருதி, இதேபோல் மேலும் ஒரு சம்பவம் வேறு எங்கும் நடக்கக்கூடாது.
பெங்களூரு சம்பவத்தில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட கர்நாடக அரசிற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.