திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
சென்னை: திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவிலின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூரில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் திகழ்கிறது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வியாழனன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
இதனையடுத்து பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் நான்கு மாடவீதிகளில் சந்திரசேகரர் வீதிஉலா நிகழ்ச்சியும், ஆலய மண்டபத்தில் சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வருகின்ற ஒன்பதாம் தேதியன்று நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக திருவான்மியூர் போலீசார் கூடுதல் காவலர்களுடன் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.