நிதி நிறுவன சொத்துக்களை அபகரிக்க துடிக்கும் ரெட்ஹில்ஸ் போலீசார்: பெண்கள் பகீர் புகார்
சென்னை: ரெட்ஹில்ஸ் காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தாஸ் & கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரிஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரெட்ஹில்ஸ் பகுதியில் தாஸ் & கோ அலுவலகம் மூலம் மகளிர் சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கி வருகிறோம். இதன் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு எங்கள் நிறுவனம் மீது சுமோட்டா வழக்கு தொடரப்பட்டதை காரணமாகக் கொண்டு, தொடர்ந்து எங்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும், பணம் கேட்டு மிரட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்ததாகவும், அந்த மனுவைத் திரும்பப் பெறுமாறு ரெட்ஹில்ஸ் காவல் நிலைய காவலர்கள் தங்களை மிரட்டி வருவதாகவும் கிரிஜா கூறினார்.
மேலும், பலமுறை அதிகாரிகளை சந்தித்து நீண்ட காலமாக மனுக்கள் அளித்தும் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும், மாறாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்வோம் என மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, தங்களை மிரட்டுவதாகக் கூறப்படும் ரெட்ஹில்ஸ் காவல் நிலைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்த கோரிக்கை மனுவை முதல்வர் தனிப்பிரிவில் அளித்துள்ளதாகவும் கிரிஜா தெரிவித்தார்.

