தமிழ் செய்திகள்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 54-வது ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29 முதல் தொடக்கம்

சென்னை: அருட்தந்தை பி.டி. அருளப்பா அவர்களால் 1972-ஆம் ஆண்டு ஓலைக்குடிசையில் தொடங்கப்பட்ட பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், இன்று உலகம் போற்றும் பேராலயமாக உயர்ந்து நிற்கிறது. இத்திருத்தலத்தின் 54-வது ஆண்டுத் திருவிழா, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 11 நாட்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு திருவிழா “அமைதி” (சமாதானம்) என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 29-ல் கொடியேற்றம்

ஆண்டுத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது. திருத்தல ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள 75 அடி உயர கொடிமரத்தில் 12 அடி நீளமுள்ள திருக்கொடி ஏற்றப்படுகிறது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருக்கொடியும், அன்னையின் திருத்தேரும் அருகிலுள்ள வீதிகளில் பவனி வரும். மாலை 5.45 மணிக்கு அன்னையின் உருவம் பதித்த திருக்கொடியை சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி புனிதம் செய்து ஏற்றுகிறார். தொடர்ந்து ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறும்.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைப் பெருவிழா நடைபெறுகிறது. வழிபாட்டு வாழ்வின் மையமாக விளங்கும் நற்கருணையை சிறப்பிக்கும் வகையில் கூட்டுத் திருப்பலி, நற்கருணைப் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

செப்டம்பர் 7-ல் திருத்தேர்ப் பவனி

செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை-மயிலை பேராயர் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்னையின் திருத்தேர்ப் பவனி நடைபெறுகிறது.

தேர்ப் பவனி நிறைவடைந்த பின்னர், செப்டம்பர் 8-ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும்.

செப்டம்பர் 8-ல் ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா

செப்டம்பர் 8-ஆம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.45 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி நடைபெறும். அதனைத் தொடர்ந்து தமிழில் நடைபெறும் திருப்பலிக்கு முன்பாக ஆரோக்கிய அன்னைக்கு மணிமுடி சூட்டும் விழா நடைபெறுகிறது.

மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் நன்றித் திருப்பலி நடைபெற்று, பெசன்ட் நகர் திருத்தலத்தின் 54-வது ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது.

பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக இந்தத் திருவிழா நடைபெறுவதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக காவல்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் திருத்தல நிர்வாகம் இணைந்து விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குடிநீர் விநியோக மையங்கள் மற்றும் 20 தற்காலிக மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவிழா நாட்களில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாரிமுனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு, பெரம்பூர், வில்லிவாக்கம், அயனாவரம், வடபழனி, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மருத்துவம் மற்றும் தூய்மைப் பணிகள்

அவசர மருத்துவ உதவிக்காக திருத்தல வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். புனித தாமஸ் மருத்துவமனை மற்றும் பெருநகர் சென்னை மாநகராட்சி சார்பிலும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.

திருவிழா நாட்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடற்கரைச் சாலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெசன்ட் நகர் திருத்தலம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், பக்தர்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் படகுகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் தகவல் அட்டைகள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடங்கள்

திருவிழாவின் முக்கிய நாட்களில் பெசன்ட் நகர் அவென்யூ மற்றும் கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகத் தனிப்பட்ட தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு ‘மைனர் பசிலிக்கா’ அந்தஸ்து

இதனிடையே, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு உரோமையில் உள்ள திருத்தந்தை 14-ம் லியோ அவர்கள் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ‘மைனர் பசிலிக்கா’ (சிறிய பேராலயம்) என்ற உயர்நிலையை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் சிறப்பு நிகழ்வு செப்டம்பர் 21-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை-மயிலை பேராயர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழக ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

“அனைவருக்கும் இறையாசீர், மரியே வாழ்க!” என்ற வாழ்த்துடன் பெசன்ட் நகர் திருத்தலத்தின் 54-வது ஆண்டுத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *